டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மதுபான ஊழல் வழக்கு என கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் அதிஷி ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தாலும், அதன் பின்னர் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிஷி 47267 வாக்குகள் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 44472 வாக்குகள் பெற்றார்.
ஆனால், அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவருமே தங்கள் தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் 24583 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பர்வேஷ் சிங் 28448 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தற்போதைய முன்னிலை நிலவரப்படி டெல்லியில் பாஜக 47 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் டெல்லியில் பாஜக ஆட்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. இது, டெல்லி மக்கள் காங்கிரஸுக்கு முழுமையான நிராகரிப்பை தெரிவித்துவிட்டார்கள் என்பதற்குச் சான்றாகும்.