அக்டோபரில் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.266 கோடி மட்டுமே திரண்டது!

Webdunia

சனி, 10 நவம்பர் 2007 (11:39 IST)
அக்டோபர் மாதத்தில் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் ரூ. 266 கோடி திரட்டப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாகும்.

அக்டோபர் மாதம் முழுவதும் பங்குச் சந்தையின் போக்கு நிலையற்றதாக இருந்தது. பங்குகளின் விலை அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ன. அமெரிக்க பொருளாதார நெருக்கடி, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, பார்டிசிபேட்டரி நோட் எனப்படும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு செபி விதித்த கட்டுப்படாடு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தால் அரசியல் அரங்கில் ஏற்பட்ட பதற்றம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் அக்டோபர் மாதத்தில் பொதுவாக நிதிச் சந்தை நிலையில்லாமல் இருந்தது.

இதனால் பல நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் புதிய பங்குகளை வெளியிடும் திட்டத்தை ஒத்திவைத்தன. இதன் விளைவாக அக்டோபர் மாதத்தில் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ. 266 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் புதிய பங்கு வெளியீடு மூலம் கணிசமான தொகை திரட்டப்படுகிறது. இந்த அக்டோபர் மாதத்தில் தான் இந்தளவு குறைவான தொகை திரட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முந்தைய மாதமான செப்டம்பரில் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் ரூ. 3,800 கோடி திரட்டப்பட்டது.

ஜூன் மாதத்தில் புதிய பங்கு வெளியீடு வாயிலாக ரூ.11,906 கோடி திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதத்தில் ரிலிகரி என்டர்பிரைசஸ் லிமிடெட், ரதி பார்ஸ், அலையட் கம்ப்யூட்டர்ஸ் இன்டர்நேஷனல் ( ஆசியா ), எஸ். வி.பி.சி.எல், வரூன் இன்டஸ்டிரிஸ், பேரக் வாலி சிமென்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்