குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகத்தை விரிவு படுத்தவும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு முதலீடு திரட்டவும் வெளியிடப்பட்ட பங்குகளுக்கு 116 மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.
குஜராத் மாநிலத்தில் கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது முந்த்ரா என்ற கடற்கரை கிராமம். இங்கு அதானி தொழில் குழுமம் தனியார் துறைமுகத்தையும், அதை ஒட்டி தேஜி என்ற ஊரில் அதானி பெட்ரோநெட் தொழிற்சாலை, சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றை அமைக்கிறது. இதன் ஒரு பகுதி முதலீடான ரூ.1,771 கோடி திரட்ட ரூ.10 முகமதிப்புள்ள 4 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. ஒரு பங்கின் விலை ரூ.400 முதல் ரூ.440 என அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1 ந் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பெறப்பட்டன.
இந்த பங்கு வெளியீட்டிற்கு முதல் நாளில் இருந்தே பல்வேறு தரப்பு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. 7 நாட்களில் சுமார் 464 கோடி விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதில் தகுதிபெற்ற முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து 159 மடங்கு விண்ணப்பங்களும், அதிகளவு முதலீடு செய்யும் தனி நபர்களிடமிருந்து 156 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து 13 மடங்கு விண்ணப்பங்களும் வந்துள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள மொத்த பங்குகளில் 4 கோடியே 1 லட்சம் பங்குகள் பொது மக்களுக்கும், இதன் ஊழியர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பங்குகள் ஒதுக்கப்படும்.
இந்த பங்கு வெளியீட்டிற்குப்பின்., இதிலிருந்து திரட்டப்படும் முதலீடு, இந்நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் 10.05 விழுக்காடாக இருக்கும்.
பங்குகள் செபியின் விதிமுறைகளின் படி ஒதுக்கப்படும்.
தற்போது முந்த்ரா துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் ஏற்றுமதி, இறக்குமதி வசதிகள் விரிவுபடுத்தப்படும். இப்போது இந்த கண்டெய்னர் மையத்தில் தினசரி 200 லட்சம் டன் எடைக்கான கண்டெய்னர்கள் சரக்கு கப்பல்களில் ஏற்றி, இறக்கப்படுகின்றன. இந்த பணி வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டிற்குள் 500 லட்சம் டன் எடைக்கான கண்டெய்னர் ஏற்றி இறக்கும் வகையில் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். துறை முகத்தை ஒட்டி கண்டெய்னர் மையம் அமைக்கப்படும். இத்துடன் 32,000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம், பெட்ரோலிய துறை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
இந்த துறைமுகத்தில் இருந்து 300 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இங்கிருந்து டாடா மின் உற்பத்தி நிலையம், அதானி மின் உற்பத்தி நிலையம் ஆகியவைகளுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்.
இந்த முதலீட்டின் ஒரு பகுதி தற்போது சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள அதானி லாஜிஸ்டிக் நிறுவனம், ரயில் மூலம் கண்டெய்னர் போக்குவரத்து துவக்க ஆரம்பிக்க பயன்படுத்தப்படும்.
இந்த பங்கு வெளியீடு எல்லா தரப்பினரின் கவனத்தையும் கவர காரணம், முந்த்ரா துறைமுகம் கப்பல் போக்குவரத்தின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. அத்துடன் டெல்லி - தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் அதிகளவு வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நடக்கின்றது. இதனால் முந்த்ரா துறைமுகத்திற்கு சரக்குகள் தொய்வில்லாமால் தொடர்ந்து வரும். இதன் வருமானமும், இலாபமும் அதிகரிக்கும். புதிதாக அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வாயிலாகவும் வருமானமும், இலாபமும் தொடர்ந்து கிடைக்கும். இது போன்ற காரணங்களினால் இந்த பங்கு வெளியீடு அமோக ஆதரவைப் பெற்று, 116 மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்தது.
அதானி தொழில் குழுமத்தை நிறுவிய கவுதம் அதானி பரம்பரையாக உள்ள தொழில் அல்லது வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் சிறிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை துவக்கினார். 1998 ஆம் ஆண்டில் சரக்கு போக்குவரத்திற்கு வசதியாக சிறிய துறைமுகத்தை அமைக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் குஜராத் கடல்வள வாரியத்திடம் முழு அளவு துறைமுகத்தை அமைக்கும் அனுமதி பெற்று, முந்த்ராவில் துறைமுகத்தை அமைத்தார். அது தான் இப்போது பெரிய அளவிலான நவீன துறைமுகமாகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதானி குழுமம் பல்வேறு தளங்களில் இயங்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.