புள்ளியியல் கணக்கெடுப்பை மாற்ற வேண்டும் : புரோனாப் சென்!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (18:34 IST)
புள்ளியியல் கணக்கெடுப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று தலைமை புள்ளியல் ஆய்வாளர் டாக்டர் புரோனாப் சென் தெரிவித்தார்.

புது டெல்லியில் மத்திய புள்ளியில் துறை தயாரித்துள்ள தேசிய வரவு - செலவு புள்ளி விவரம் - கணக்கெடுப்பு முறையும் தகவல் திரட்டும் வழிகளும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது டாக்டர் புரோனாப் சென் கூறியதாவது:

இந்திய புள்ளியியல் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில் துறை உற்பத்தி அட்டவணை, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய புள்ளி விவரங்கள் திரட்டும் முறைகளையும் முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.

காலாண்டு மதிப்பீட்டை பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் பரவலான முறையில் பயன்படுத்துகின்றன. தனியார் துறையினர் அரசின் செலவினங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தனியார் துறை நிறுவனங்கள், இதன் அடிப்படையில் முதலீடு செய்கின்றன.

நாங்கள் இந்த புள்ளி விபரங்களை உபயோகப்படுத்தும் நிறுவனங்களுக்கு, இதனால் அதிக பயனளிக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள புள்ளி விவரம் திரட்டும் முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது வேலை வாய்ப்பு பற்றிய புள்ளி விவரம் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. இந்த கால இடைவெளியை குறைக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதாரத்துடன் இந்திய பொருளாதாரம் இணைக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், வேலை வாய்ப்பு பற்றிய புள்ளி விவரங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

சிம்லாவில் இருந்து வெளியிடப்படும் நகர்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கான விலைவாசி அட்டவணையை நீக்க அரசு முயற்சித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான விலைவாசி புள்ளி விவரம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. ஆனால் மொத்த விலைவாசி விலைக்குறியீட்டு அட்டவணை வாரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.

இந்த நகர்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கான விலைவாசி அட்டவணையை, நகர்புற தொழிலாளர்களுக்கான அட்டவணையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்கு பிறகு நகர்ப்புற தொழிலாளர்களுக்கு தனியாகவும், கிராமப்புற தொழிலாளர்களுக்கு தனியாகவும் என இரண்டு நுகர்வோர் விலைவாசி அட்டவணை வெளியிடப்படும்.

இதுமட்டுமல்லாமல் தொழிற்சாலை பிரிவு தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசி அட்டவணையையும் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நுகர்வோர் விலைவாசி அட்டவணையில் மேலும் பல பொருட்களின் விலைகள், சேவைக்கான கட்டணங்களும் சேர்க்கப்படும் என்று டாக்டர் புரோனாப் சென் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்