மோசடி காப்பீடு முகவர்கள் : இர்டா!

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (14:26 IST)
காப்பீடு நிறுவனங்கள், மோசடியில் ஈடுபடும் முகவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று காப்பீடு ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( இர்டா) கூறியுள்ளது.

ஆயுள் காப்பீடு, மற்ற வகை காப்பீடு முகவர்கள் மீது புகார்கள் வருவது அதிகரித்துள்ளன. இவ்வாறு புகார்களுக்கு உள்ளான முகவர்கள் மீது காப்பீடு நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடியில் ஈடுபட்ட காப்பீடு முகவர்கள் பற்றிய விபரத்தை காப்பீடு நிறுவனங்களின் இணைய தளத்தில் தேதி வாரியாக வெளியிட வேண்டும். இதில் மோசடியில் ஈடுபட்ட முகவர்களின் அங்கிகாரத்தை எந்த தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும்.

காப்பீடு முகவர்கள், காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு காப்பீடு திட்டங்கள் பற்றிய முழு விபரங்களையும் விளக்குவதில்லை. காப்பீடு திட்டங்களில் அதிக வருவாய் கிடைக்கும் என்று தவறான தகவலை தருகின்றனர் என்று முகவர்கள் மீது இர்டாவிடம் அதிகளவு புகார்கள் வருகின்றன என்று காப்பீடு நிறுவனங்களுக்கு எழதியுள்ள கடிதத்தில் இர்டா தெரிவித்துள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன் நவம்பர் 1-ந் தேதியில் இருந்து காப்பீடு முகவர்கள் புதிய பாடத்திட்டத்தின் படி, பயிற்சி பெற வேண்டும். இந்த புதிய பாடத்திட்டத்தில் எல்லா விஷயங்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஆயுள் மற்றும் வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்ற இதரவகை காப்பீடுகளில், காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை பற்றி வருடாந்திர ஆய்வை மேற் கொள்ளவும் இர்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் அதிகளவு ஈடுப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்வதற்காக, இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது என தெரிகிறது.



வெப்துனியாவைப் படிக்கவும்