கடுக்காயில் உள்ள மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...?

Webdunia
கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. 

அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகிணி, திருவிருதுதம். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றைப் பொறுத்துக் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.
 
கபவாதங்களைத் தணிப்பதில் சிறந்தது, மூல நோய்க்குச் சிறந்தது. பசியைத் தூண்டுவது, அக்னியை அதிகரிக்கச் செய்வது. புண்களை ஆற்றுவது, மலபந்தத்தை அகற்றுவது. நாட்படப் பயன் படுத்தினால் சற்று ஆண்மை குறைவை ஏற்படுத்தலாம். இதில் செய்கிற முக்கியமான மருந்துகள் தசமூல ஹரீதகி, அகஸ்திய  ரசாயனம் போன்றவையாகும். உடலில் வீக்கம், பாண்டு, குல்மம் போன்ற நோய்களுக்கு இது சிறந்தது.
 
வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும். கடுக்காய் பொடியுடன் எள் சேர்த்துச் சாப்பிட, குஷ்டங்கள், விரணங்கள் மாறும். கொழுப்பை நீக்கும் தன்மை உடையது.
 
ஜீரணச் சக்தி அதிகரிப்பு, அறிவு சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகிய குணங்கள் இதற்கு உண்டு. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல் வியாதியைக் குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களைப் போக்குதல், சுவாச நோய்களைக் கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற  பல பலன்களைக் கடுக்காய் தருகிறது.
 
மூன்று கடுக்காய்த் தோலை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்துத் துவையலாக அரைத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்