டிக் டாக் செய்வதற்காக ஓடும் நீரில் தலைகீழாக குதித்த இளைஞர், பாறையில் அடிபட்ட உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற 18 வயது இளைஞர், டிக் டாக்கில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இது வரை பல டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ராஜா தனது நண்பர்களுடன் கங்கா கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு டிக் டாக் வீடியோ எடுக்கவேண்டுமென தோன்றியுள்ளது.
உடனே தனது நண்பர்களை மொபைலில் வீடியோ எடுக்க சொல்லி கால்வாயில் தலைகீழாக குதித்துள்ளார். அவர் குதித்த இடத்தில் ஏராளமான பாறைகள் இருந்துள்ளன. குதித்த வேகத்தில் பாறை அவரது தலையில் அடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த துயர சம்பவம், வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.