டெல்லியில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள புராதானமான நாடாளுமன்றம் அருகிலேயே அதிநவீன புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகரின் மைய பகுதியில் இதுபோன்ற பிரம்மாண்டமான கட்டிட வேலைகளை மேற்கொள்வதால் சுற்றுசூழல் பாதிக்கும் என்பதோடு, புராதான சின்னமாக உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டிக்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் சுற்றுசூழலுக்கும், புராதான சின்னங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மாசுக்கட்டுப்பாட்டு துறையின் உரிய அனுமதியுடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி புதிய நாடாளுமன்றத்தின் அருகில், தற்போது உள்ள வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பிரதமருக்கும், துணை ஜனாதிபதிக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதைப்போல எம்.பி.க்களுக்காக ஸ்ரம் சக்திபவன் வளாகத்தில் அறைகள் கட்டப்பட உள்ளன.
இதனைத்தொடர்ந்து பிரதமர், துணை ஜனாதிபதி போன்ற மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதமர், ஜனாதிபதியின் வீடுகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல எம்.பி.க்கள் அறைகளில் இருந்தும் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல இயலும். மேற்கண்ட தகவலை நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.