திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் திருப்பதி தேவஸ்தானம் தரிசன ஏற்பாடுகளை விரைவுப்படுத்தி வருகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் உள்ளது. இந்த புரட்டாசி மாதம் முழுவதும் ஏழுமலையானை வணங்கும் மக்கள் அசைவம் சாப்பிடாமல் இருந்து சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது வழக்கம். மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
தற்போது புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 12 மணி நேரமாக தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படாததால் சுமார் 8 கி.மீ நீளத்திற்கு பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக காத்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் உள்ளதால் தங்கும் விடுதிகள், அறைகள் முழுவதும் நிறைந்துள்ளன. இதனால் வேகவேகமாக மக்கள் அனைவரும் தரிசனம் செய்து முடிப்பதற்கான பணிகளில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.