இந்தியா வந்தது அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட பொறியாளரிடன் உடல்

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (08:03 IST)
அமெரிக்க இனவெறியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய பொறியாளர் சீனிவாசனின் உடல் இன்று இந்தியா வந்தது. அவரது சொந்த ஊரான ஐதராபாத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.




அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பார் ஒன்றில் அமெரிக்க இனவெறியன் ஒருவன் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறியபடி சரமாரியாக சுட்ட சம்பவத்தில் இந்திய பொறியாளரான 32 வயது சீனிவாசன் பரிதாபமாக மரணம் அடைந்தார். அவருடன் இருந்த மற்றொரு  என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சீனிவாசனின் உடல் நேற்று அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் ஏற்றப்பட்டு இன்று இந்தியா வந்தது. பின்னர் சீனிவாசனின் சொந்த ஊரான ஐதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சீனிவாசனின் நண்பர்கள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகனின் இந்த பரிதாப நிலை குறித்து சீனிவாசனின் தாயார்  வர்தினி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எந்த தாய்க்கும் இதுபோன்ற வேதனை வரக்கூடாது, இது போன்ற  சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து இந்தியர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு உயர் கல்வியறிவு இல்லை என்றாலும், தனது மகனை படிக்க வைத்தோம். அவனது பெயர் சொல்லும்படி சிலரை அவன்  சம்பாதித்துள்ளான். என் மகன் குறித்த டிவி, செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட செய்தியா வர வேண்டும். இத்தகைய செய்திகள் வரும்  என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை' என்று வேதனையுடன் கூறினார்.
அடுத்த கட்டுரையில்