குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கவர்னரிடம் காங்கிரஸ் கோரிக்கை

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (00:04 IST)
குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குஜராத் கவர்னரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது. 
 

 
குஜராத் மாநிலத்தில், இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து, சுமார் 10 பேர் பலியானார்கள். 200க்கும் அதிகமாக வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டது. பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், குஜராத்தில் பதட்டம் நீடித்த வண்ணம் உள்ளது.
 
இந்த நிலையில், குஜராத்தில், ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனையடுத்து, குஜராத் கவர்னர் ஓ.பி. கோஹ்லியை, காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா மற்றும் பரத்சின்க் சோலங்கி ஆகியோர் தலைமையிலான குழு சந்தித்து குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி மனு அளித்தனர்.
 
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், படேல் சமுகத்தின் தொடர் போரட்டம் மற்றும் கலவரமும், பாஜக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதும் பிரமதர் மோடியையும், பாஜக மேலிடத்தையும் கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.