வார்த்தைகள் மூலம் நிழல் யுத்தம் செய்யும் பாஜக, திரிணமூல் காங்கிரஸ் - பிரகாஷ் காரத் விமர்சனம்

Webdunia
செவ்வாய், 6 மே 2014 (15:47 IST)
பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் வார்த்தைகள் மூலம் நிழல் யுத்தம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் விமர்சனம் செய்துள்ளார்.
பிரகாஷ் காரத் தான் எழுதிய ஒரு கட்டுரையில், பாரதீய ஜனதா கட்சி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இரண்டுமே இனவாத அரசியல் செய்வதாக விமர்சித்து எழுதியுள்ளார்.
 
மேலும் அக்கட்டுரையில், ‘மேற்கு வங்கத்தில், பாஜக மற்றும் இந்துத்துவா ஆகிய இனவாத சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் பாஜகவையும், மேற்கு வங்கத்தில் கொடிய பிற்போக்கு சக்தியாக விளங்கும் திரிணமூல் காங்கிரஸையும் தோற்கடிக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளுமே வார்த்தைகளால் ஒன்றோடு ஒன்று நிழல் யுத்தம் நடத்துகிறது.
 
பீகாரில், 'இளம்சிவப்பு புரட்சி' என்ற பெயரில் மாட்டு இறச்சிக்கு தடை போன்ற பாஜக பிரதமர் வேட்பாளரின் பேச்சிலிருந்து அந்த கட்சி முஸ்லிம்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்புணர்வு தெளிவாகிறது. மேலும் உத்தர பிரதேசத்திற்கு சென்று ராமர், சிவன் ஆகியோருக்கு மேல் முறையீடு செய்வதாக வாய் ஜால அரசியல் செய்கிறார்.
 
பெருநிறுவன ஆதரவு செய்தி ஊடகங்கள் நரேந்திர மோடியின் தேர்தல் களத்தை, வளர்ச்சியின் முன்னோட்டமாகவும் நல்லாட்சிக்கான தலைவராகவும் வர்ணித்து வந்தாலும், பிரச்சாரங்களில் மோடி பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்-ன் முஸ்லீம் விரோதப் போக்கு வெளிப்படுகிறது.
 
மோடி பிரச்சாரம் மேற்கொண்ட மூன்று தினங்களுக்கு பின்னர்தான் அசாமில் கலவரம் வெடித்தது. அவர், அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரையும் வங்கதேசத்தவர்கள் என்று தெரிவித்தார். மே-16க்கு பின் அவர்கள் எல்லோரும் வங்கதேசத்திற்கு ஓட வேண்டும் என்று கூறினார். இதன்மூலம் அசாமில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக அந்த மாநில மக்களைத் தூண்டிவிட்டார்.
 
அதனைத் தொடர்ந்து அங்குள்ள முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல மேற்கு வங்க மாநிலத்திலும் குண்டர்கள் ஒடுக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்தின் இயலாமையே காரணமாக உள்ளது” என்று அந்த கட்டுரையில் பிரகாஷ் காரத் எழுதியுள்ளார்.