கிர் தேசிய பூங்காவில் சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
குஜாரத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் ஏராளமான காட்டு மிருகங்கள் உள்ளன. அவைகள் அங்கு சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சமீபத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுக்கப்போய், மூன்று பேர் சிங்கங்களின் தாக்குதலில் பலியாகினர்.
இதனால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி வரவும், விலங்குகளுடன் செல்பி எடுக்கவும் பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆனால், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அதை மீறியுள்ளார். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இதனால், அவர் தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். சமீபத்தில் அவர் குஜாரத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவிற்கு சென்றார். அப்போது விதிமுறைகளை மீறி ஜீப்பில் இருந்து கீழே இறங்கி, சற்று தூரத்தில் அமர்ந்திருக்கும் சிங்கங்களோடு செல்பி எடுத்து அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதற்கு ‘குடும்ப புகைப்படம்’ என்று பெயரும் வைத்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சை கிளப்பியுள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில வனத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.