தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்திக்கு ரூ.500 அபராதம்

Webdunia
வியாழன், 15 மே 2014 (12:33 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற போது ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அப்போது, அவர் அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஷோக் சிங் என்பவருடன் ஒரு காரின் மீது அமர்ந்தபடி ஊர்வலமாக சென்றார். இந்த ரோட் ஷோ சுமார் 2 மணி நேரத்திற்கு நீடித்தது.
 
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் அவதேஷ் சிங் டோமர், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ராகுல் காந்தி  மீது  மாவட்ட ஆட்சியர் ,மாநில போலீசார்  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி குவாலியர் மாஜிஸ்டிரேட் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இவ்வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான குவாலியர் நகர போக்குவரத்து காவல் துறை அதிகாரி, போக்குவரத்து விதிமீறலுக்காக ராகுல் காந்திக்கும், அஷோக் சிங்கிற்கும் தலா  ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அபராத ரசீதையும்  தாக்கல் செய்தார்.
 
போக்குவரத்து காவல் துறை அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட ரசீதில், ராகுல் காந்தியின் கையெழுத்து இல்லை என குறிப்பட்ட வழக்கு தொடர்ந்தவர், இந்த நடவடிக்கை காவல் துறையினரால் நடத்தப்பட்ட ஒரு கண் துடைப்பு நாடகம் என குற்றம் சாட்டியுள்ளார்.