சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி: 12 இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டம்

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (13:14 IST)
இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் 12 இடங்களைத் தகர்க்கத் தகவல்கள் சேகரித்தார் என்னும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர், பிடிபட்ட அருணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரிடமிருந்து 2 லேப் டாப், 2 செல்போன், கேமிராக்கள், டேட்டா கார்டுகள், ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
 
மேலும், லேப் டாப்களை சோதனை செய்த போது சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளின் படங்களையும், வீடியோ காட்சிகளையும் அருண், பாகிஸ்தான் ஐ எஸ் ஐ அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது.
 
மெரீனாவில் உள்ள கடலோரப் பாதுகாப்புப் படை, கல்பாக்கம் அணுமின் நிலையம், டி.ஜி.பி. அலுவலகம், கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, டைடல் பார்க், பரங்கிமலையில் உள்ள, அலுவலர் பயிற்சி மையம், வண்டலூரில் உள்ள தேசிய சிறப்பு பாதுகாப்புப் படை மையம் உள்பட பல இடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனால் அருண், சென்னையில் உள்ள 12 இடங்களைத் தகர்க்கும் வகையில் படம் எடுத்து கொடுத்தது உறுதியானது. சென்னையில் கடல் வழியாகத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.