ரஜினிகாந்த் ஒரு மராத்தியர் - நிதின் கட்காரி சர்ச்சை கருத்து

Webdunia
திங்கள், 22 மே 2017 (13:06 IST)
நடிகர் ரஜினிகாந்த் ஒரு மராத்தியர் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ரஜினிகாந்த் தமிழர் அல்ல என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நான் ஒரு பச்சைத் தமிழன் என ரஜினி கூறியிருந்தார். ஆனால், அவர் ஒரு கன்னடர். அவர் நாட்டை ஆளுவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின்கட்காரி “ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கிறது.  பாஜகவில் இணைவது பற்றி அவர் யோசிக்க வேண்டும். ஏனெனில், அவருக்கு பாஜகதான் சரியான இடம். அவர்தான் முதல்வர் வேட்பாளரா என்பதுபற்றியெல்லாம் தற்போது முடிவு செய்ய முடியாது. அதை கட்சியின் நாடாளுமன்ற குழுதான் முடிவு எடுக்கும். தென்னிந்தியாவில் ரஜினிக்கு மாபெரும் ஆதரவு இருக்கிறது. 
 
அவர் ஒரு மராத்தியர். அவரது வீட்டிற்குள் நுழைந்தாலே அங்கு ஒரு மிகப்பெரிய வீர சிவாஜியின் படம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். நான் அவரை சந்திக்கும் போதெல்லாம், அவரை அரசியலுக்கு அழைத்துள்ளேன். ஆனால், அதற்கு நான் தகுதியில்லாதவன் என அவர் மறுத்துவிட்டார். தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்