கார்கில் போரில் உயிர்தியாகம் செய்தவர்கள் பெயர்களைக் கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார் மோடி - சோனியா காந்தி குற்றச்சாற்று

Webdunia
திங்கள், 5 மே 2014 (13:02 IST)
கார்கில் போரில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவர்கள் பெயர்களைக் கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றியுள்ளார்.
கார்கில் போரின்போது தனியார் குளிர்பான நிறுவனத்தின் “யெ தில் மாங்கே மோர்” (உள்ளம் இன்னும் கேட்குமே) என்ற விளம்பர வாசகம் மிகவும் பிரபலமாக இருந்தது. போர் மும்முரமாக நடைபெற்றபோது கேப்டன் விக்ரம் பத்ரா இந்த விளம்பர வாசகத்தைப் பயன்படுத்தி இந்திய ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தினார். அவரது பேச்சுகள் அடங்கிய வீடியோ வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போரில் வீரமரணம் அடைந்த அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் கேப்டன் பத்ராவின் சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசம், பாலம்பூரில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, இந்த விளம்பர வாசகத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
 
இமாச்சலப் பிரதேசம் குலு நகரில் ஞாயிற்றுக் கிழமை அவர் பேசியதாவது:-
 
மோடியின் மனம், ஆட்சி - அதிகாரப் பேராசையால் பீடிக்கப்பட்டுள்ளது. அதனால் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அவர் அரசியல் ஆதாயம் தேடுகிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே அவர் தன்னை பிரதமராகப் பாவித்து நடந்து கொள்கிறார் என்று பேசினார்.
 
இதுபோல நரேந்திர மோடி பேசியதற்கு, விக்ரம் பத்ராவின் தாயாரும், ஆம் ஆத்மி கட்சியின் ஹமீர்பூர் தொகுதி வேட்பாளருமான கமல் கந்தா பத்ரா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் மோடி ஒரு போலி நாட்டுப்பற்றாளர் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.