'மோடி ஒரு அரக்கன்' - மீண்டும் ஆரம்பித்துவிட்டார் பேனி

Webdunia
சனி, 3 மே 2014 (15:55 IST)
மோடியை தாக்கிப் பேசுபவர்களுக்கு தலைமையேற்கும் தகுதி யாருக்கு என்று கேட்டால், அது கட்டாயம் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மாவுக்குதான் என்று உறுதியாக சொல்லலாம். அந்த அளவுக்கு மோடியை வறுவறு என்று வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார் பேனி.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சமீப காலமாக காட்டமாக தாக்கிப் பேசி வரும் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா தற்போது மோடி ஒரு அரக்கன் என்று கூறியுள்ளார்.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஸ்கான்வா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
 
குஜராத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டதை எதிர்விளைவு என்று கூறும் மோடி, தான் ஒரு மனிதப்பிறவியா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த நாட்டில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தி, அவர்களுக்குள் வெறுப்புணர்வை தூண்டிவிடுபவர் மனிதப்பிறவி அல்ல; ஒரு அரக்கன்.
 
மோடியைப் போன்ற நபர் நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரி. இப்படிப்பட்டவர் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள 85 சதவீதம் அடித்தட்டு மக்களின் சுயமரியாதை சீரழிந்து, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளவர்களின் ஆதிக்கம் சமூகத்தில் தலைதூக்கத் தொடங்கிவிடும்.
 
இவ்வாறு பேனி பிரசாத் வர்மா பேசினார்.
 
மத்திய இரும்புத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் பேனி பிரசாத் வர்மா, ஏற்கனவே மோடியை ஒரு ஆர்.எஸ்.எஸ். ரவுடி என்றும், மோடி ஒரு விலங்கு என்றும் பேசி தேர்தல் ஆணையம் கண்டித்தது. தொடர்ந்து மோடியை இதே போன்று விமர்சித்து வந்ததால், "இதைப்போன்ற தனிநபர் தாக்குதலை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், அடுத்து பிரச்சாரம் செய்யாதபடி தடை விதிக்கப்படும் என்று இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.