50 நாட்களில் எதுவும் செய்ய முடியாது - மன்மோகன் சிங் அதிரடி

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (13:05 IST)
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என இந்திய முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுனருமான மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.    
 
இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்ந விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. ரூபாய் நோட்டு தொடர்பாக மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களைவையில் முன்னாள் பிரதமர்கள் பங்கேற்று உரையாடி வருகின்றனர். 
 
அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது. 50 நாட்கள் பொறுங்கள் என மோடி கூறியுள்ளார். ஆனால், அந்த 50 நாட்கள் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் முற்றிலும் முடங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி 2 சதவீதம் குறையும்” என்று அவர் கூறினார். 
 
மேலும் “ருபாய் நோட்டு விவகாரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 நாள் அவகாசம் மிகவும் குறைவானது. வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மோசமான நிர்வாகத்திற்கு ரிசர்வ் வங்கி உதாரணமாகி விட்டது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்