திருமணத்திற்கு மறுத்த பெண்ணை மாடியிலிருந்து தூக்கி போட்ட வாலிபர்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (15:41 IST)
காதலித்து விட்டு, திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை, வாலிபர் ஒருவர் வீட்டின் மாடியிலிருந்து தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைநகர் டெல்லியில் அதிக அளவுக்கு நிகழ்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில், ஒரு இளம் பெண்ணை ஒரு வாலிபர் பட்டப்பகலில், கத்தியால் 21 முறை குத்தி கொலை செய்தார். 
 
அதன் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. டெல்லியின் மங்கள் பூரி எனும் பகுதியில் உள்ள அவந்திகா என்கிளேவ் என்கிற அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை அமித் என்பவர் காதலித்து வந்துள்ளார். 
 
அப்பெண்ணின் வீட்டிற்கு நேற்று மாலை சென்றுள்ளார் அமித். அவரைக் கண்ட அப்பெண்ணின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர்,  அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதைக் கண்டு கொள்ளாத அந்த வாலிபர், அப்பெண்ணிடம்  “என்னை திருமணம் செய்து கொள்வாயா.. மாட்டாயா?” என்று கோபமாக கத்தியுள்ளார்.
 
அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே கோபமடைந்த அந்த வாலிபர், அப்பெண்ணை தூக்கி அவரது வீட்டின் பால்கனியிலிருந்து கீழே போட்டு விட்டார். இதில் அப்பெண் பலத்த காயமடைந்தார். அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாயாரும், சகோதரியும் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
அவரது கை, கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரை தூக்கி போட்ட அமித்தை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
அந்த பெண் தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு தர மறுக்கிறார். அதனால் கோபமடைந்து அப்படி செய்ததாக அமித் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் மூலம் அந்த பெண் அமித்திற்கு அறிமுகம் ஆகியுள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
 
ஆனால், அமித் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பது அப்பெண்ணின் தாயாருக்கு தெரியவந்ததால், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாயாரின் எதிர்ப்புக்கு அடிபணிந்த பெண், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அமித்திடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அமித் இப்படி செய்து விட்டதாக தெரியவந்துள்ளது.
 
இந்த விவகாரம், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்