இளம் தம்பதியிடம் போலீசார் அடாவடி; வெளியான வீடியோ ; மன்னிப்பு கேட்ட டி.ஜி.பி.

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (15:29 IST)
இளம் தம்பதியிடம் கேரள போலீசார் அடாவடியில் ஈடுபட்டது, நேரிடையாக பேஸ்புக்கில் வெளியானதால், கேரள டி.ஜி.பி மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
திருவனந்தபுரம் அருங்காட்சி நிலையத்திற்கு அருகே உள்ளே பூங்காவில், விஷ்னு என்ற வாலிபர் தனது மனைவி ஆர்த்தியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். மனைவியின் தோள் மீது விஷ்னு கை வைத்தவாறு பேசியதாக தெரிகிறது. இதை, அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். தாங்கள் பொது இடத்தில் அநாகரீகமாக எதுவும் நடந்துகொள்ளவில்லை என தம்பதி கூறியுள்ளனர். ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல் போலீசார் அவர்களை திட்டியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை, விஷ்னு தன்னிடமிருந்து செல்போன் மூலம் பேஸ்புக்கில் நேரிடையாக ஒளிபரப்பினார். உடனடியாக அதை ஆயிரக்கணக்கானோர் தங்களது பக்கத்தில் பதிவு செய்தனர்.  அந்த வீடியோவை 65 ஆயிரம் பேர் பார்த்தனர். 


 

 
இது தெரியாமல், அந்த தம்பதியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் அவர்கள் மீது, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, ரூ.200 அபராதமும் விதித்தனர். அதன்பின், அவர்கள் இருவரும் கணவன், மனைவி என்பது உறுதியானதால் அவர்களை விடுவித்தனர். ஆனால், உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என தம்பதி கூறிவிட்டனர். 
 
இதற்கிடையில், இந்த வீடியோவை பார்த்த பலரும், போலீசார் மீது கடுமையான கண்டனதை தெரிவித்தனர். இந்த தகவல் கேரள முழுக்க பரவியது. இதையடுத்து, கேரள டி.ஜி.பி லோக்நாத் பெக்ரா, அந்த தம்பதியிடம் கேரள போலீசாரிடன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்.
 
அடுத்த கட்டுரையில்