பணமதிப்பிழப்பு நடவடிக்கை ; ஓராண்டு நிறைவு : மக்கள் பட்ட பாடு

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (16:48 IST)
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு திட்டத்தை கடந்த வருடம் நவம்பர் 8ம், தேதி இரவு அறிவித்தார். அதன்படி நாளையுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது.


 

 
நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் மக்களிடம் பேசிய மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தற்போது முதல் செல்லாது என அறிவித்தார். கருப்புப்பணத்தை மீட்பதற்காகவும், தீவிரவாத குழுக்களிடம் சிக்கியுள்ள பணத்தை குறிவைத்தும் இந்த திட்டம் செயல்படுத்தபடுவதாகவும் அறிவித்தார். அதோடு 100 நாட்களுக்குள் மட்டும் மக்கள் பிரச்சனையை சந்திப்பார்கள். மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்தார்.
 
அதன் பின் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற மக்கள் வங்கிகளில் மாற்ற வரிசையில் நாள் கணக்கில் தவம் கிடந்தார்கள். வங்கியில் பணம் செலுத்தியவர்கள், புதிய பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையங்களின் முன் குவிந்தனர். பல ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிறு மற்றும் பெரு தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. யார் கையிலும் பணம் இல்லை.


 

 
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெற்றவர்கள் சில்லரைய மாற்ற முடியாமல் தவித்தனர். ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மூன்று மாதங்கள் மக்கள் படாத பாடுபட்டனர். ஆனால், கருப்பு பணம் மீட்கப்பட்டதாய் எந்த தகவலும் இல்லை. மக்களிடம் எவ்வளவு பணம் புழங்கியதோ, அதற்கு நிகராக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மக்கள் செலுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியானது. 
 
ஏறக்குறைய பணமதிப்பிழப்பு திட்டமே தோல்வி என பொருளாதார வல்லுனர்கள் முழங்கினார்கள். இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பலன் தராது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனே இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தது தனிக்கதை. 
 
மேலும், கருப்புப் பணம் என்பது ரூபாய் நோட்டுகளாக மட்டுமே பதுக்கி வைக்கப்படவில்லை. அது, நிலங்களாகவும், ஆவணங்களாகவும், தங்கமாகவும் பலரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பீட்டால் அவைகளை வெளியே கொண்டு வரமுடியாது என சமூக ஆர்வலர்களும், பொருளாதார வல்லுனர்களும் தெரிவித்தனர்.


 

 
தோல்வியை மறைக்க டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. அது கூட ஒரு சில பெரிய நகரங்களில் மற்றுமே வெற்றி பெற்றது. நோட்டுகளை பயன்படுத்தியே பழக்கப்பட்ட இந்திய மக்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் தோற்கடித்தனர். இதனால், பாஜக அரசின் செல்வாக்கு மக்களிடையே குறைந்தது. 
 
பணமதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவ்வளவு ஏன்? மக்களிடமிருந்து திரும்பப் பெற்ற பழைய நோட்டுகளின் எண்ணிக்கையை கூட ரிசர்வ் வங்கி இதுவரை வெளியிடவில்லை.
 
ஆனாலும், பணமதிப்பிழப்பு திட்டத்தின் பலன் தாமதமாகத்தான் புரியும் என தொடர்ந்து கூறி வருகிறது மத்திய அரசு. 
 
பணமதிப்பிழப்பு திட்டத்திற்கு விலைமதிப்பில்லா சில மனித உயிர்களும் பலியாகின. மக்கள் நலனை பாதிக்கும் திட்டங்களால் அரசின் மீது மக்களுக்கே அதிருப்தியும், கோபமுமே ஏற்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்