மாற்றுத்திறனாளி பலர் தன்னம்பிக்கையுடன் சோர்ந்து போகாமல் வாழ்க்கையில் வெற்றி அடைந்த பலர் குறித்த செய்திகளை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் ஒரு வருடத்திற்கு முன்னர் பேருந்து விபத்து ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனது இரண்டு செயற்கை கால்களின் உதவியுடன் சொந்தமாக சலூன் வைத்து சம்பாதித்து வருகிறார்
ஐதராபாத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தான் அந்த தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்பவர். தனக்கு யாருடைய அனுதாபமும் தேவை இல்லை என்றும், தன்னை நம்பி வாழும் தன்னுடைய குடும்பத்தினர்களை காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தான், செய்ற்கை கால் உதவியுடன் இந்த சலூனை நடத்தி வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சலூனில் கிடைக்கும் வருமானம் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் போதுமானதாக இருப்பதாகவும், தன்னை நம்பிய வாடிக்கையாளர்களை தான் திருப்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடல் ஊனமுற்றவர் என்ற பரிதாபத்திற்காக இந்த கடைக்கு வரவில்லை என்றும் பிரகாஷின் முடிதிருத்தும் பணி சுத்தமாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.