தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரப்பியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சசி தரூரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரது சார்பில் சசி தரூருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், கூறிய அனைத்து கருத்துகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அதற்காக அச்சு, மின்னணு ஊடகங்களில் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவதூறு நோட்டீஸில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கருத்துகள் 2024 மக்களவைத் தேர்தலில் சசி தரூருக்கு ஆதரவானதாகவும், பாஜக தலைவரின் பிரச்சாரத்தை பாதிப்பதாகவும் உள்ளது. மேலும், சசி தரூரின் கருத்துகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.