இனி ஒரே நாடு; ஒரே தேர்வா!?? – அமலுக்கு வந்தது NRA!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (08:41 IST)
மத்திய அரசின் ரயில்வே பணிகள், வங்கி பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு இனி ஒரே தேர்வை நடத்தும் என்.ஆர்.ஏ முறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் வங்கி பணிகள், ரயில்வே பணிகள் ஆகியவற்றிற்கு தனித்தனி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தேர்வு எழுதுபவர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி கட்டணங்கள் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், தனித்தனியாக தயார் ஆவது, மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்வு எழுத செல்வது போன்ற இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு தேசிய பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency) என்ற புதிய அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின்படி ஒருமுறை கட்டணம் செலுத்தி தேர்வெழுதினாலே போதும். மதிப்பெண் அடிப்படையில் ரயில்வே, வங்கி துறைகளில் வேலைவாய்ப்பை பெற முடியும். தற்போதைக்கு வங்கி மற்றும் ரயில்வேத்துறை மட்டும் இணைக்கப்பட்டிருந்தாலும் பிற்காலத்தில் தனித்தனி தேர்வு நடத்தும் பிற துறைகளும், தனியார் துறைகளும் இதில் இணைக்கப்பட்டு NRA மதிப்பெண் பகிர்தல் மூலமாக மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும்.

ஒரே தேர்வாக நடப்பதால் மாவட்டம் விட்டு மாவட்டமோ அல்லது தொலைதூரமோ செல்ல வேண்டிய சிக்கல் இல்லாமல் அனைத்து மாவட்டங்களில் தேர்வு மையங்களை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் தொழில்நுட்பம் சாராத குரூப் பி மற்றும் சி க்கான தேர்வுகளை தேசிய பணியாளர் தேர்வு முகைமை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்