கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சமமான நிதி பகிர்வு இல்லை என்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கிய அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் கர்நாடகா குற்றம் சாட்டியிருந்தது. இதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்து இருந்தது.
போராட்டத்தில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது என தெரிவித்தார். இந்த வருடம் கர்நாடகா 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது என்றும் நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், அதன்பின் மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது என்றும் சித்தராமையா கூறினார். சமமான நிதி பகிர்வு இல்லையென்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 28 எம்.எல்.சி.க்கள், ஒரு எம்.பி., 5 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 135 பேர் கலந்து கொண்டனர். கர்நாடகா சார்பில் டெல்லியில் நடந்த இந்த போராட்டத்தை பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் புறக்கணித்தன.