பாஜகவின் முக்கியக் கொள்கையே இந்துத்துவாதான் - பிரகாஷ் காரத்

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2014 (19:20 IST)
நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் நிற்பது பாஜகவின் வாசகமான, அயோத்திக்கு பிறகு காசி, மதுரா என்பதை நினைவுபடுத்துகிறது என்றும், அக்கட்சியின் முக்கிய கொள்கையே இந்துத்துவாதான் என்பதை நினைவூட்டுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
Prakash Karat - CPI(M)
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், "பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் பாலம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அக்கட்சியின் மனநிலையை மக்களுக்கு தெளிவாக காட்டுகிறது. அக்கட்சியின் முக்கியக் கொள்கையே இந்துத்துவாதான். அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் நிற்பது அக்கட்சியின் வாசகமான, அயோத்திக்கு பிறகு காசி, மதுரா என்பதை நினைவுபடுத்துகிறது என்று கூறினார்.
 
பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாற்றுக்கு பதிலளித்து பேசிய பிரகாஷ் காரத், “காங்கிரஸ் ஆட்சியினால் 1999 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அக்கட்சியால் இம்முறை தேர்தலில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசு அமைவதற்கு எங்களது கட்சி ஆதரவு அளிக்கும். அவ்வாறு அமையும் அரசு காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு நல்ல மாற்றாக அமையும்” என்று தெரிவித்தார்.