சிநேகாவின் காதலர்கள் - திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (21:02 IST)
தலைப்பிலேயே கதையைச் சொல்லும் படங்களின் வரிசையில், சிநேகா என்ற பெண்ணின் காதல் அத்தியாயங்களை ஒவ்வொன்றாக விவரிக்கிறது இந்தப் படம்.

 
முதல் காதல், வழக்கம் போல் கல்லூரியில் தொடங்குகிறது. காதலனுக்குச் சுமார் மூஞ்சி குமாராகச் சில நண்பர்கள், அவர்களின் அச்சுபிச்சு ஜோக்குகள், கல்லூரிப் பேராசிரியரின் ஒருதலைக் காதல்... என எல்லாமே வழக்கம் போல்தான். கல்லூரிக் காதலன் தன் காதலைச் சொன்னதும் சிநேகா உடனே ஏற்றுக்கொள்கிறாள். ஏனென்றால், இருவருக்கும் ஒரே ரத்த வகை, சுமாராகப் படிக்கிறான், கொஞ்சம் கண் ஜாடை காட்டினால் இன்னும் நன்றாகப் படிப்பான் என அதற்குக் காரணமும் சொல்கிறாள். இப்படி வெளிப்படையான பெண்ணாக, அங்கேயே கவனம் பெறுகிறாள். கல்லூரிப் படிப்பு முடித்ததும் திசைகள் பத்திரிகையில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. என்னைக் கேட்காமல் எப்படி வேலைக்குப் போகலாம் என அவன் கேட்க, நான் எதற்கு உன்னைக் கேட்கணும்? இது என் வாழ்க்கை, என் முடிவு என்று அவள் கூற, அங்கே முடிகிறது முதல் காதல்.
 
திசைகள் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்ததும் உதவி இயக்குநர்கள் பற்றிய ஒரு கட்டுரைக்காக, சிநேகா சந்திக்கும் உதவி இயக்குநர் தான், பாண்டியன். அவனது திறமை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பார்த்து, சினேகா ஈர்க்கப்படுகிறாள். பின்னர் அதுவே காதலாக மாறுகிறது. "காதலிப்பது எளிதில்லை, அதற்கு நிறைய செலவாகும். காதலிக்கும் பெண்ணுக்குச் செல்பேசியை ரீசார்ஜ் செய்யணும், காஃபி டே அழைத்துப் போகணும், மல்டி பிளக்ஸ் தியேட்டருக்கு அழைத்துப் போகணும். எனவே காதல் எனக்கு எட்டாக் கனி" என அவன் சொல்கிறான். "நீ உன் இலட்சியத்தை எட்டும் வரை, இந்த எல்லாச் செலவுகளையும் நான் செய்கிறேன்" என இவளே அனுதாபத்துடன் அவனைக் காதலிக்கிறாள். பின்னர், அவனே தன் இலக்கினை எட்ட முடியாமல் தோற்றுப் போனதால் சொல்லாமல் கொள்ளாமல் விலகிச் செல்கிறான். இப்படியாக இரண்டாவது காதலனும் காணாமல் போகிறான்.

 
அடுத்து, பத்திரிகைப் பணிக்காகக் கொடைக்கானல் செல்லும்போது, இளவரசனைச் சிநேகா சந்திக்கிறாள். செருப்புத் தைக்கும் சாதியில் பிறந்த அவனுக்குப் பின், உருக்கமான ஒரு காதல் பின்னணி. வேறு சாதியைச் சேர்ந்தவள், அவனது காதலி. அவளும் அவனும் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொள்ள, அது பிடிக்காத பெண் வீட்டார், அவளை உயிரோடு எரித்துக் கொல்கிறார்கள். இவன் தப்பித்து வந்து, ஆதிவாசி மக்களுடன் தங்கியிருக்கிறான். சாதியால் காதல் மறுக்கப்பட்ட அவனது கதையைக் கேட்டதும் தன்னையே அவனுக்குக் கொடுக்க, சிநேகா முன்வருகிறாள். அப்படியே அவனது கருவையும் சுமக்கிறாள். இந்த இளவரசன் காதல், அண்மையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

சிநேகாவின் காதலர்கள் ஒரு புறம் இருக்க, சிநேகாவைப் பெண் பார்க்க வந்துவிட்டு, அவளைக் காதலிக்கும் இன்னொரு பாத்திரமும் இருக்கிறது. இப்படியாக, சிநேகா என்ற பெண்ணை மையமாக வைத்து, படம் நகர்கிறது. 

 
சிநேகா என்ற இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி, படம் முழுவதிலும் ஆட்சி செலுத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் அழகும் சிரிப்பும் நடிப்பும் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. போக்குவரத்துக் காவலரிடமிருந்து தப்பிக்கும் காட்சியிலும் பெண் பார்க்க வந்தவரிடம் காஃபி தட்டினை நீட்டும்போது, என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க எனத் துண்டுச் சீட்டு எழுதி வைப்பதிலும் அவரின் குறும்பு மிளிர்கிறது. காடு மேடு என்று பார்க்காமல் தன்னந்தனியாகக் கிளம்பும்போது அவரது துணிச்சல் வெளிப்படுகிறது. காதலனுக்குப் பரிசளிக்கும் புத்தகங்களில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொடுக்கும்போது, அவரின் தயாள குணம் பளிச்சிடுகிறது. இலட்சியத்துடன் இருப்பதால் அவனைப் பிடித்திருக்கிறது என்கிறபோது, அவரது சமூக அக்கறை புலப்படுகிறது. "அவனைக் கல்யாணம் செய்துகொண்டால், வாழ்க்கை செக்யூர்டாக இருக்காது" எனத் தோழி சொல்லும்போது, "வாழ்க்கை ஏன் செக்யூர்டாக இருக்கணும்? அப்படி இருந்தால் அந்த வாழ்க்கை ரொம்ப போர் அடிக்கும்" என்கிறபோது, சிநேகாவின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
 
இளவரசனைக் காதலிக்கும் பெண், சில காட்சிகளே தோன்றினாலும் மனத்தில் பதிகிறார். "தாயி, நான் மனசில நெனச்சவரையே கல்யாணம் செய்துக்கணும். அப்படி நடந்தால் வருஷா வருஷம் இங்க வந்து அவருக்கு மொட்டை போடுறேன்" என வேண்டிக்கொள்வது சுவையான காட்சி.
 
உதவி இயக்குநராக நடித்திருப்பவர், நல்ல சினிமா பற்றிய கனவுகளுடனும் அந்தக் கனவைத் தேக்கிய கண்களுடனும் கவர்கிறார். இங்கே சினிமா ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது என்பதற்கு அவர் தரும் விளக்கம், இக்காலத் திரையுலக நிலைமையை அப்பட்டமாகக் காட்டுகிறது. 
 
எழில், இளவரசன், பாண்டியன்... என நல்ல தமிழில் பாத்திரங்களுக்குப் பெயர் வைத்து, வசனங்களில் கூட பிற மொழிக் கலப்பைக் குறைத்திருப்பது, அறிமுக இயக்குநர் முத்துராமலிங்கன், தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம் ஆகியோரின் தமிழ்ப் பற்றுக்குச் சான்றுகள்.
 
'கண்ணகியின் கால் சிலம்பு'… பாடலும் அதற்காக மதுரையைக் காட்சிப்படுத்திய விதமும் அருமை. இதர பாடல்களும் நல்ல வரிகளுடன் கூர்மையாக உள்ளன. அறிமுக இசையமைப்பாளர் இரா.பிரபாகரின் பின்னணி இசை, படத்துக்குப் பெரிய பலம். 
 
படத்தின் சில பகுதிகள் / பாத்திரங்கள் நன்றாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் படம், அழுத்தமாக இல்லை. ஒரு நாடகம் போலவும் தொலைக்காட்சித் தொடரைப் போலவும் இழுவையான காட்சிகள் பல, படத்தில் உள்ளன. நடிப்பும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது. காட்சி அமைப்புகளில் விறுவிறுப்பு குறைவு. இயக்குநரின் முதல் படம் என்கிற வகையில், அடுத்த படத்தில் இவற்றை அவர் சரி செய்துகொள்வார் என எதிர்பார்க்கலாம்.
 
எது எப்படி இருப்பினும் இந்தப் படத்துக்குப் பிறகு, கதாநாயகி கீர்த்தியைக் காதலிப்பவர்கள் அதிகரிப்பது உறுதி. 

சினேகாவின் காதலர்கள் - படங்கள்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்