மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக தேமுதிக இடையே கூட்டணிக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு, கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஏழு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்றும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக கேட்கும் நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை பதவி தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே கூட்டணிக்கான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.