கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இணையத்தளத்தில் இளைஞர்களும், பொதுமக்களும் வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவு கீழே:
ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடகங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்.
திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்.
என்ன செய்வது இறந்தது பிராமண பெண் இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்???
இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே ஒய்.ஜி.மகேந்திரன் தான் இந்த பதிவின் மூலம், இறந்து போன சுவாதிக்காக கண்ணீர் விடும், அவளின் இழப்பினை தங்களது மகளாக பாவிக்கும் லட்சோப லட்ச மக்களின் மனங்களில் நஞ்சினை விதைக்கப் பார்க்கிறார்.
முதலாவதாக கொலையாளியை குறித்து எந்தவிதமான தெளிவான தகவலும் காவல்துறைக்கே தெரியாத நிலையில், கொலை செய்தது ’பிலால் மாலிக்’ என்ற இஸ்லாமிய நபர் ஒருவரின் பெயரை தெரிவித்ததன் மூலம், அவர் தனக்கிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மீண்டும் ஒரு அயோத்தியில் ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போன்று மற்றொரு சம்பவம் நடைபெறுவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மனப்பாண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும், போகிற போக்கில் திராவிட அரசியல் பேசுவர்களை பொறுக்கிகள் என்றும் இடதுசாரிகளையும், அதன் அங்கமான மாதர் சங்கத்தையும் கயவர்கள் என்றும் கயமைத்தனமாகவே கூறியுள்ளார்.
தமிழகத்தின் தேசியகீதமான (?) ’பீப்’ பாடல் விவாகரத்தில் தமிழகத்தின் தலைசிறந்த (?!) இசையமைப்பாளரான, தங்களது இனத்தவரான அனிருத் ரவிச்சந்திரனுக்கு எதிராக போராடியதற்காக தற்போது அந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார்.
மேலும், திராவிட அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, ஆரிய அரசியல் பேச வேண்டும் என்று நினைத்திருப்பதையும் காண முடிகிறது. இதனால்தான், இவ்வளவு பிராமணப் பாசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நிச்சயம் இது கண்டிக்கத்தக்கது. இது தலித் பெண்ணா அல்லது பிராமணிய பெண்ணா என்பது தேவை இல்லாதது. ஒரு சமூகத்தின் கேடுகெட்ட நிலை இந்த படுகொலை.
ஆனால், ஒரு இறப்பின் மூலம் இப்போது ஒய்.ஜி.மகேந்திரன் தான் ஆதாயம் தேடுகிறார். இது தவிர, தலித் என்றால் மகேந்திரனுக்கு ஏன் கசக்கிறது. காலங்காலமாக அவர்கள் இவர்களை போல ஆதிக்கச் சாதியினர்களால் ஒடுக்கப்பட்டு வந்தார்களே!.
தற்போதும் கூட, கோவிலுக்குள் ஒரு தலித் பெண் நுழைந்த காரணத்தால் அந்த கோவிலின் ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக அபராதம் விதித்துள்ளனர். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் என்ன செய்தார்?
சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு, தலித்துகளின் குடிசைகள், கோவில் தேர் எரிக்கப்பட்டு, தலித் பெண்கள் ஆடைகள் உருவப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் என்ன செய்தார்?
உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக, அந்த வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் என்ன செய்தார்?
இவ்வளவு ஏன்? கடந்த மார்ச் மாதம் உடுமலைப்பேட்டை சங்கர், உயர்சாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பட்டப்பகலில் நடுரோட்டில் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாரே! ஏன் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு வார்த்தை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் 19 வயது மாணவி தனது காதலன் மற்றும் தனது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றனர். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் எங்கே சென்றார்?
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், கேரளாவைச் சேர்ந்த தலித் மாணவியை சீனியர் மாணவிகள் பினாயிலைக் குடிக்க வைத்த சம்பவம் அரங்கேறியது. அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் எங்கே சென்றார்?
இறந்தது யாராயினும் அது ஒரு உயிரிழப்பு. குற்றத்தை களைய வேண்டியது ஒரு அரசின், அதிகாரிகளின் கடமை. ஆனால், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டியதும் அவசியம்.
ஆனால், அதற்கு மாறாக இது போன்று வார்த்தைகள் மூலம், மேலும் சாதிய உணர்வுகளையும், மத உணர்வுகளையும் தூண்டி சமூகத்தில் வன்முறையை தூண்டுவது எந்த வகையில் நியாயம் ஒய்.ஜி.மகேந்திரன்?