ரமலான் நோன்பின் மாண்புகள்

Webdunia
புதன், 31 மே 2017 (14:26 IST)
இஸ்லாம் என்னும் மார்க்கம் தனது சகாக்களுக்கு ஐந்து பெரும் கடமைகளை போதிக்கிறது. அவை முறையே இறை நம்பிக்கை (கலிமா), இறை வழிபாடு (தொழுகை), தான தர்மங்கள் செய்தல் (ஜாகத்), ரமலான் நோன்பு மற்றும் புனித பயணம் (ஹஜ்). மற்ற இஸ்லாமிய மாதங்களை விட இந்த ரமலான் மாதம் சிறப்பு பெற்ற இறைஅருள் மாதம் ஆகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

 
தற்சமயம் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தோழர்கள் மார்க்கத்தின் நான்காவது கடமையை நிறைவேற்றி வருகின்றன. பகல் முழுவதும் பசித்து இருப்பதும், இரவு முழுவதும் இறைவனை வணங்கி இருப்பதும் நோன்பின் சிறப்பு அம்சம். நோன்பின் காலங்களில் படைத்த இறைவனுக்காக தண்ணீர் கூட அருந்துவது இல்லை. சூரிய உதயத்தை ஆரம்பமாகக் கொண்டு நோன்பை தொடங்கும் இஸ்லாமியர்கள் சூரிய அஸ்தமனத்தை கொண்டு நிறைவு செய்கிறார்கள்.
 
பசி என்பது மிகவும் அற்புதமான மருந்து. உலகின் பல புரட்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் அடித்தளம் இந்த பசி. இந்த பசியின் மூலம் கோபம், பொறாமை, காமம், அகக்காரம் என அனைத்தும் மனிதனின் கட்டுப்பாடில் வருகின்றது. இந்த பசியின் மூலம் தங்களின் ஏக இறைவனின் நெருக்கத்தை பெறுகிறார்கள். இந்த பசியின் மூலம் மனிதன் சுய ஒழுக்கத்தையம் சுய தன்அடக்கத்தையும் பெறுகிறான். இறைவனது அருள்வாசல் வாயிலை பெறுகிறான். அவன் சுற்றத்தார் மத்தியில் கண்ணியம் பெறுகிறான். மா மன்னர்கள் முதல் சமூகத்தின்  அடித்தட்டு  மனிதனும் இந்த பசியை உணர்கிறான். பணக்காரன் ஏழையின் பசியை உணர்கிறான். இது தான் இஸ்லாம் காட்டும் சமத்துவம். எனினும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் உடைய பெண்கள், நெடுதூரம் பயணம் செய்பவர்கள், நீரிழுவு நோயாளிகள் என  சிலர் நோன்பில் இருந்து விலக்கு பெறுகிறார்கள்.   
 
நோன்பு என்பது வெறும் பசித்து இருப்பது அல்ல, மாறாக ஒவ்வரு உடல் உறுப்பிற்கும் நோன்பு உள்ளது உதாரணத்திற்கு வாய் தீயவற்றை பேசாமல் இருக்க வேண்டும் கண் தீயவற்றை பார்க்காமல் இருக்க வேண்டும். ஏழையின் பசியை உணர வேண்டும் என்பதற்காக மட்டும் நோன்பு இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஏழைகளுக்கு நோன்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும். மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதில் இறைவனுக்கு விருப்பமா என்றால் அதுவும் கிடையாது.  நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான். அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
நோன்பின் திறப்பு இஃப்த்தார் என்று அழைக்கப்படும். பள்ளிவாசல்களில் தரப்படும் நோன்பு கஞ்சி மற்றும் பேரீத்தம் பழங்கள் கொண்டு நோன்பை நிறைவு செய்கிறார்கள். நோன்பு நிறைவு செய்வதற்கு முந்தைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இறைவன் வாக்குறுதி தந்து இருக்கிறான். அதன் பொருட்டு மனிதன் இறைவனுக்காக நோன்பு நோற்கிறான்.
 
நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் கேடயம் ஆகும். நோன்பு வைப்பவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை, முட்டாள் தனமான செயல்கள் செய்வதும் இல்லை, யாரேனும் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் தான் நோன்பு வைத்திருப்பதாக கூறுகின்றார்கள். உலகின் ஒரு சார் மக்கள் கடுமையான கோடையிலும் மறு சார் மக்கள் குளிரிலும் மழையிலும் தங்களின் இறைவனுக்காக நோன்பு நோற்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி, நோன்பு ஒரு ஆன்மீகப் பயிற்சி. இந்த ஆன்மீகப் பயிற்சி இறைவனை அஞ்சுவதற்காக கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம்.


 
அடுத்த கட்டுரையில்