அண்டம் என்றால் உலகம். லிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது.
சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும்.
நிலம் - ஆவுடையார், ஆகாயம் - லிங்கம், கடல் - திருமஞ்சனமாலை, மேகம் - கங்கை நீர், நட்சத்திரங்கள் - ஆகாய லிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை - எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம்.