மகாலட்சுமியின் பூரண அருளை பெற்றுத்தரும் ஆடிப்பூரம் !!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:48 IST)
ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் மஹாலட்சுமியின் அம்சமான ஆண்டாள்.  அவர் தோன்றிய நட்சத்திரமே ‘ஆடிப்பூரம்’.


ஆடி மாதத்தில் அனைத்து அம்பிகை கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் ஆலயங்களில் சூடித் தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம்.

மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. ஆண்டாள் அவதரித்தது பூரம் நட்சத்திரம். சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரம். சுக்கிரனு க்கு உரிய நட்சத்திரம். எனவே ஆடிப் பூரத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு மகாலட்சுமியின் பூரண அருளும், சுக்கிர பகவானின் பூரண அருளும், ஆண்டாளின் பூரண அருளும் அவசியம் கிடைக்கும்.

அவதாரம் என்பது மேலிருந்து கீழே இறங்கி வருவது. பூமாதேவி நம்மை எல்லாம் மேல் நிலைக்கு அழைத்து செல்வதற்காக, வைகுந்தத்தில் இருந்து கீழே நமக்காக இறங்கி வந்தாள்  என்பதே அவள் அவதார சிறப்பாகும். இதை மாமுனிகள் "இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக வன்றோ இங்கே ஆண்டாள் அவதரித்தாள்" எனப்பாடுகின்றார். நாம் கர்மத்தைக்  கழிப்பதற்காக பிறந்திருக்கின்றோம். நம்மை மீட்டெடுப்பதற்காக ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரங்க மன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்