கடைகளில் விற்கப்படும் பல வாசனை நிறைந்த சோப்புகள் மற்றும் வாசனை பவுடர்களும் சருமத்தை பாதிக்கிறது. இதனால் 30 வயதுடையவர்களுக்கு தோல் சுருக்கம் மற்றும் முகச் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் மற்றும் சருமம் பாதிப்படையாமல் இருக்க வேண்டுமெனில் இயற்கையாக மூலிகை தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம், பச்சைப்பயிறு - 250 கிராம், வேப்பிலை காய்ந்தது - 100 கிராம், வெட்டிவேர் - 100 கிராம், குப்பைமேனி - 100 கிராம், பன்னீர் ரோஜா - 100 கிராம், பூலாங்கிழங்கு - 100 கிராம், கோரை கிழங்கு - 100 கிராம், கார்போக அரிசி - 100 கிராம், பூந்திக்காய் தோல் - 100 கிராம், ஆவாரம் பூ மற்றும் இலை - 100 கிராம், கடலைப் பருப்பு - 150 கிராம்.
செய்முறை:
மேல் கூறிய அனைத்து பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து பின் அதனை நன்றாக காய வைக்கவேண்டும். பொருட்கள் அனைத்தும் நன்கு காய்ந்ததும் அதனை எடுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை குளிக்கும் போது தேய்த்து குளித்தால் உடல் மற்றும் சருமம் வாசனையாகவும், பாதிப்புகள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
பலன்கள்:
மூலிகை குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, தேமல், சிரங்கு, கரும்புள்ளி, கண்களில், கருவளையம், படர்தாமரை, வேர்க்குரு, முகப்பரு, தோல் அலர்ஜி, கருந்திட்டு ஆகியவை மாறும். உடலிலுள்ள நாற்றமும் நீங்கும். உடல் மற்றும் சருமம் அழகு பெறும்.