இதன் பெயர் தான் அரசாங்க பயங்கர வாதம்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (13:30 IST)
அரசியல்வாதிகள் அச்சப்பட்டு போனார்கள். தலைவன் இல்லாத, சாதி மதம் இல்லாமல் கட்சி சார்பற்ற களத்தில் மாவீரர்கள், வீராங்கணைகள்.  முதல் முறையாக நள்ளிரவிலும் கூட பெண்களின் கவுரவம் காக்கப் பட்டது.காந்தியின் கனவு நனவான களம். யாருக்கும் அஞ்சாத வீரம், பெண்மையை மதிக்கும் ஆண்மையை கண்டோம்.



இன்று ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் திரண்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, சரித்திரம் காணாத மக்கள் எழுச்சியை அடக்க நினைக்கும் அரசின் செயல் ராஜாங்க பயங்கர வாதம். திடீரென்று நேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மாணவர்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என்கிறார்கள்.  தேவை நிரந்தர தீர்வு என்கிறார்கள் மாணவர்கள்.
 
ஏன் இந்த அவசரம், விபரிதம்
 
இந்த அரசு மாணவர் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர துடித்தன் விளைவுதான் இந்த தடியடி. களம் வேறு திசை நோக்கி செல்கிறது. காஷ்மீரைப் போல குஜராத்தைப் போல துணை ராணுவம் உதவி கொண்டு போராட்டத்தை அடக்க முயல்கிறதா? ஏன் முதல்வரும்  ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மாணவர்களை சந்திக்க பயம் கொள்கிறார்கள். சிதறி ஓடிய கூட்டம் கடலை நோக்கி, இந்த அரசு அச்சப்பட வேண்டும், வெட்கப்பட  வேண்டும். யாரை நோக்கி சுடுகிறது இந்த அரசு?
 
இன்று காலைதான் அரசின் ஆணை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் மதியம் வரை விவாதித்து பதில் சொல்ல நேரம் கேட்கிறார்கள். அதற்குள் நடவடிக்கைகளுக்கு என்ன அவசரம்? வலுக்கட்டாயமாக மாணவர் கூட்டம் வெளியேற்றப்படுகிறது. ஜனநாயகம் என்பது இருக்கிறதா? இல்லையா? நடேசன் சாலையில் போலீஸ் வாகனம், காவல் நிலையம்  கொழுத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் கல் வீச்சு, என்ன நடக்கிறது?
 
ஓபிஎஸ்-ம் மோடியும்
 
அடி மீது அடி வைக்கதான் அம்மி கூட நகரும், என்பதை போலத்தான் இருந்தது மத்திய மாநில அரசின் நடவடிக்கைகள். மெரினாவில் திரண்ட ஏழு லட்சம் பேரால் மட்டுமே சாத்தியமானது அவசர சட்ட வரைவுகள். ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் அல்ல. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தூங்கிய மத்திய மாநில அரசுகளை போராட்ட களத்தில் தடி கொண்டு போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறதா?
 
இந்திய  இறையாண்மை
 
இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்கிறீர்களா ஆதி அவர்களே ! யாரை ஏமாற்றுகிறீர்கள், போராட்டத்தை கைவிட வைக்க அரசுக்கு கிடைத்த கடைசி ஆயுதம் இந்திய இறையாண்மை . குஜராத்தில் 2015ல் இட ஒதுக்கீடு கேட்டு இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் மீதும், டெல்லியில் 2016ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹைய குமார் மீதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என்றே வழக்கு தொடர பட்டது.
 
பல வண்ணங்களின் சங்கமம்
 
7 லட்சம் பேர் திரண்டிருந்த களம் மெரினா. அது பல வண்ணங்களின் சங்கமம். அவர்களின் குறிக்கோள் ஜல்லிக்கட்டாக இருக்கலாம். அதற்காக தேசிய பிரச்சனைகளை விவாதிக்க கூடாது  என்கிறது இந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழு.  இந்த களத்தில் தான் ப்ராய்லர் கோழிகளின் தீமை பற்றியும், மான்சாண்டோ விதைகளின் அபாயம் பற்றியும், பிளாஸ்டிக் பைகளுடனான இயற்கையின் முரண்பாடுகள் பற்றியும், அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு பற்றியும் மதவாதிகளின் வரலாறு பற்றியும் விரிவான விவாதங்கள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு தானே வந்தீர்கள் இதையெல்லாம் பேசக்கூடாது என்கிறது ஆர்வலர் குழு. இந்தியாவே பல வண்ணங்களின் சங்கமம் தானே? விஷ செடிகள் முளைத்திருந்தால் அவற்றை களைத்து ஏறிய வேண்டும். கூட்டத்தில் யாரோ தவறான கோஷம் போட்டால் அதை மட்டும் நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமே தவிர போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கூடாது.  மக்கள் போராட்டத்தை தடி கொண்டு அடக்க நினைக்கும் இந்த அரசு கொடுங்கொல்  அரசு.
 
தேசத்தின் நலன் வேண்டி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மக்கள் எழுச்சி புரட்சி தொடர வேண்டும்.
 
ஜெய்  ஹிந்த்.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
Sumai244@gmail.com

அடுத்த கட்டுரையில்