நியாயம் சொல்லுங்கள் மோடி அவர்களே!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (16:56 IST)
முத்தலாக் வழக்கு தொடர்பாக மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ரவி ஷங்கர் பிரசாத், அருண் ஜெட்லீ ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கங்கள் சொல்லி வந்தனர்.
 

 
விவசாயிகள் மீது கரிசனம் காட்டுங்கள்!:
 
காவேரி பிரச்சனையில் வாய் திறக்காத நம் வளர்ச்சியின் நாயகன் திரு.நரேந்திர மோடி அவர்கள் முதல் முறையாக உத்திரப் பிரதேசத்தில் மகோபா பொதுக்கூட்டத்தில் முத்தலாக் பற்றி பேசுகிறார். இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை காப்பதா? வேண்டாமா? என்று கேள்விகள் கேட்கிறார்.
 
எப்போதும் தேசத்தின் வளர்ச்சி, வெளிநாட்டுப் பயணங்கள், வெளியுறவுக் கொள்கைகள், தொடர்பான விவாதங்கள் என மிகவும் கடினமானப் பொறுப்பில் இருக்கும் பிரதமருக்கு ஏன் இஸ்லாமிய பெண்களின் மீது இத்தனை கரிசனம்? தங்களின் மேலான கரிசனம் லட்சோப லட்சம் காவேரி பாசன விவசாயிகள் மீது ஏன் வரவில்லை?
 
இந்து மத பெண்கள் மீதும் கரிசனம் காட்டுங்கள்!:
 
இஸ்லாமிய பெண்களுக்கு சமத்துவ உரிமை அளிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்கிறீர்கள் படுஜோராக. சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மகாராஷ்டிராவின் சனி பகவான் கோவிலிலும் பாலின சமத்துவ உரிமைக்காகப் போராடும் இந்து மத பெண்களுக்கு சமத்துவ உரிமை அளிக்கப்படவேண்டுமா? வேண்டாமா? என பகிரங்கமாக அறிவிக்க நீங்கள் தயாரா? இந்த இந்து மதப் பெண்கள் மீதும் கரிசனம் காட்டுங்கள் பிரதமர் அவர்களே!
 
ஐயனின் ஐயம் தெளிய:
 
ஜனநாயகத்தில் மதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் கூடாது என்கிறீர்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனைத்தும் மதம் சார்ந்தது அல்ல; அது குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்தது அல்ல; ஆண்களின் மனோபாவம் சார்ந்தது.
 
அதை ஏன் ஒருமதத்துடன் ஒப்பிடுகிறீர்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இருப்பதான உங்கள் ஐயம் தெளிவுபெற உத்திரப்பிரதேசத்தின் தேவ்பந்த் மதரஸாவின் மார்க்க அறிஞர்கள் விளக்கங்கள் தயாராக உள்ளனர். அதை கேட்டுவிட்டு பிறகு யார் மீது வேண்டுமானாலும் கரிசனம் காட்டுங்கள்.
 
ஓர்சார்பு விவாதங்கள்:
 
ஜனநாயகத்தில் கருத்துக்களும் விவாதங்களும் இருக்க வேண்டும் என்கிறீர்கள். கருத்துக்களை ஏற்காமல் விவாதங்கள் செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல. எங்கோ ஒரு அர்ஷியா, எங்கோ ஒரு ஷாபானு பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
 
முன்னாள் எம்.எல்.ஏ பதர் செய்யது போன்றோர் உச்சநீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு காலம்காலமாக அங்கீகாரம் செய்த ஷரியத் பற்றி பேச நீங்கள் யார்? பொதுசிவில் சட்டம் பேசி எங்களை பயமுறுத்துவது தான் பிரதமருக்கும் அவரின் அமைச்சர்களுக்கும் ப்ரோட்டோகாலா?
 
ஷரியத் சட்டத்தால் சில (அரிதிலும் அரிதாக) பெண்கள் பாதிக்கப்படுவதும், அதுகுறித்த முறையீடுகள், விவாதங்கள் செய்ய, அதனை சரிசெய்ய எங்களின் மார்க்க அறிஞர்கள் இருக்கிறார்கள். இந்த தேசத்தின் பிரதமரே ஆனாலும் இதில் தலையிட நீங்கள் யார்?
 
யசோதா பென்க்கு கரிசனம் காட்டுங்கள்:
 
உங்களின் 18வது வயதில் உங்களால் திருமணம் செய்யப்பட்டு 2014 வரை ஊடக வெளிச்சம் படாமல் வாழ்ந்து வந்த ஓர் அபலை பெண் யசோதாபென் .அவரின் பாஸ்போர்ட் மீது இதுவரை உங்கள் அமைச்சகம் கரிசனம் கிடைக்கவில்லை.
 
அவர் தகவல் பெரும் உரிமை சட்டத்தின்கீழ் தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து இந்த அரசுக்கு சில கேள்விகள் கேட்கிறார். பதில் கிடைக்கப் பெறாமல் சமத்துவ உரிமை சமூக உரிமைக்காக போராடுகிறார். அவர் மீது கரிசனம் காட்டுங்கள். அதைவிட்டு இஸ்லாமிய பெண்கள் மீது ஏன் இந்த கரிசனம்? மீண்டும் சொல்கிறேன் இது ஆடுகள் நனைய ஓநாய்கள் அழுத கதைதான்.
 
 
இரா .காஜா பந்தா நவாஸ், பேராசியர்,
sumai244@gmail.com
அடுத்த கட்டுரையில்