இன்றைய ஐபிஎல் போட்டியில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், கிங்ஸ் லெவன் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை 13 போட்டிகள் விளையாடியுள்ள கிங்ஸ் லெவன் அணிக்கு இது கடைசி ஆட்டம். இதுவரை 12 புள்ளிகள் பெற்றுள்ள கிங்ஸ் லெவன் அணி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது. 4வது இடத்திற்கு சென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் வலுவான என்.ஆர்.ஆர் கிங்ஸ் லெவனுக்கு தேவையாக உள்ளது.
முன்னதாக சுமாரான ஆட்டத்தை மட்டுமே அளித்து ப்ளே ஆஃப் தகுதியை முதலாவதாக இழந்த சிஎஸ்கே அணி கடந்த சில ஆட்டங்களில் அனைத்து அணிகளையும் சாதரணமாய் வீழ்த்தி வருகிறது. சிஎஸ்கேவின் திடீர் அதிரடியால் ப்ளே ஆஃப் தகுதிக்கு போராடி வரும் அணிகள் மேற்கொண்டு சிரமங்களை சந்தித்துள்ளன. முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ், நைட் ரைடர்ஸ் இரு அணிகளையும் வீழ்த்தி அவர்களின் ப்ளே ஆஃப் கனவுக்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளது சிஎஸ்கே.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்த முடியாமல் போனால் கிங்ஸ் லெவனின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் என்பதால் இந்த ஆட்டத்தில் வெல்ல போவது யார் என்ற தீவிர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் சுற்று ஆட்டத்திலும் கிங்ஸ் லெவனை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.