அதிர்ச்சியளிக்கும் சந்தேகங்களை கிளப்பும் மோடியின் 500, 1000 செல்லாது அறிவிப்பு!

அ.கேஸ்டன்
சனி, 19 நவம்பர் 2016 (07:35 IST)
கடந்த 8-ஆம் தேதி இரவு ஊடகங்கள் முன் தோன்றிய பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் இனி செல்லாது அவை திரும்ப பெறப்படுகிறது என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பால் இந்தியாவே அதிர்ந்தது.


 
 
மக்கள் வீதிகளில் ஏடிஎம் மையங்கள் முன் 100 ரூபாய் நோட்டுக்காக காத்திருந்தனர். ஒரு பக்கம் அன்றாட வாழ்க்கையை சுமூகமாக வாழ முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட, மறுபக்கம் நாட்டை கருப்பு பணத்தில் இருந்து காக்க வந்த வீர சூரனாக பிரதமர் மோடியை சித்தரித்தனர்.
 
மிகவும் ரகசியமாக இந்த திட்டத்தை வைத்திருந்த மோடி கருப்பு பண முதலைகள் மீது மிகப்பெரிய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை ஆரம்பித்துள்ளார் என ஒரு மாஸ் ஹீரோவாக பிரதமர் மோடியை ஊடகங்களும் பாஜகவும் அதன் ஆதரவு கட்சிகளும் புகழ்ந்து தள்ளின.
 
ஆனால் உண்மை நிலவரம் இப்பொழுது தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த கருப்பு பண நடவடிக்கை மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டது அல்ல என்பது தெரியவந்துள்ளது. இதனால் பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
 
கடந்த 8-ஆம் தேதி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட 500, 1000 ரூபாய் திரும்ப பெறும் திட்டத்தை பிரதமர் அறிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதமே பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வெளியாகும் உள்ளூர் செய்தித்தாளில் இந்த 500, 1000 திரும்ப பெறப்படும் தொடர்பான செய்தி வந்தது. அகிலா எனப்படும் இந்த செய்தி தாளை நடத்துபவர் பிரதமர் மோடியின் நண்பர்களில் ஒருவரான கிரிட் ஞானேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் வெளியாகும் டெய்னிக் ஜக்ரன் எனப்படும் இந்தி செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற உள்ளதாகவும் அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டு வர உள்ளதாகவும் உறுதியாக கூறியுள்ளது.
 
பிரதமர் மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் 8 நாட்களுக்கு முன்னர் மேற்குவங்கத்தில் பாஜகவினரால் 3 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. இரண்டு கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட அந்த தொகையில் கடைசி டெபாசிட்டாக 40 லட்சம் ரூபாய் பிரதமர் மோடி செல்லாது என்ற அறிப்பை அறிவித்துக் கொண்டிருக்கும் நேரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதில் உச்சக்கட்டமாக இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு முன்கூட்டியே அம்பானி, அதானி ஆகியோருக்கு தெரியும் என ராஜஸ்தான் எம்.எல்.ஏ பவானி சிங் கூறியுள்ளார். அவர் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டு வெளியாகும் முன்னரே ரகசியமாக வைக்கப்பட்ட அதன் புகைப்படம் இணையதளங்களில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
 
பல மட்டங்களில் தகவல்களை கசியவிட்டோ அல்லது தகவல் கொடுத்த பின்னரே இந்த 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு வந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. பிரதமர் மோடியின் வார்த்தையில் நம்பகத்தன்மை இல்லை என்பதை மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் தோலுரித்துக்காட்டுவதாக சமூக வலைதளங்களில், இணையதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் அதற்கான திட்டம் தான் இது பொதுமக்கள் கொஞ்ச நாளைக்கு சிரமங்களை பொறுத்துக்கொள்ளுங்கள் என கூறப்படுவது எல்லாம் வெறும் நாடகமே. கருப்பு பணத்தை வைத்திருந்தவர்களுக்கு  முன்கூட்டியே தகவல்கள் கிடைத்து விட்டது, தற்போது பாதிக்கப்படுவது சாமனியர்களே. இது அரசியல் லாபத்திற்காக பிரதமர் மோடியின் தந்திர விளையாட்டு என பலரும் பேசுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்