திமுக அரசுடன் பா.ம.க இணக்கம் காட்ட காரணம் என்ன? பிறகு இது எப்படிப் போகும்?

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:37 IST)
"வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஐந்து மாதங்கள் ஆகின்றன. திமுக அரசு இதற்கடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதற்காக போராட்டத்திற்கான அவசியமில்லை என்று அனைத்து இளைஞர்களிடமும் நான் கூறி வருகிறேன்," என்று செப்டெம்பர் 17ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், ராணிப்பேட்டையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட வேண்டிய அவசியமில்லை. ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளது" என கூறியிருந்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் "வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது; இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்!," எனவும் பதிவிட்டிருந்தார்.

பின்னணி என்ன?

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு தனியாக 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் கடைசி நாள்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வன்னியர் சாதிக்கு மட்டும் தனியாக 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணை " இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

கடந்த 2022 மார்ச் 31ம் தேதி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், "மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை கொடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது" என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, "இந்த விவகாரத்தில் தொய்வடையாமல் போராடி வெற்றியை பெறுவோம்" என்று பாமக அச்சமயத்தில் தெரிவித்திருந்தது.

தற்போதைய நிலைப்பாடு என்ன?

இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தை பாமக ஒரு சுமுகமான நிலைப்பாட்டுடன் கையாள்கிறதா என்ற பிபிசி தமிழின் கேள்விக்கு பதிலளித்த அக்கட்சி செய்தி தொடர்பாளர் பாலு, "அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு, திமுக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன கூறியது?


வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம். அதற்கு போதிய தரவுகளை கொடுத்தால், தமிழக அரசு அதை செய்வதற்கு தடை இல்லை," என்று கூறியுள்ளது. அதன் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்களும் அவரை இது தொடர்பாக இரண்டு முறை சந்தித்திருக்கிறார்.

ஐந்து மாதங்கள் கால தாமதம் ஆகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றாலும், தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் மருத்துவர் ஐயா (ராமதாஸ்) நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்," என்றார்.

அதே வேளையில், இந்த விவகாரத்தில் இப்போது இணக்கமான அணுகுமுறையை கையாண்டாலும், பின்னர் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சிகாமணி கூறுகிறார். "வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீடு என்பது 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக இயற்றப்பட்ட சட்டம். இந்த சட்ட விவகாரத்தை பாமக நிச்சயமாக கைவிடமாட்டார்கள். காரணம், அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் இருக்கிறது. இதற்காக ஒருவேளை அரசுக்கு கால அவகாசம் அளிக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்' என்றார்.

ஆனால், தமிழக அரசு இந்த சட்டத்தை விரைவாக கொண்டுவர வேண்டும் என்று பாலு தெரிவிக்கிறார். "இந்த நீண்ட கால உரிமைக்கான, நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். புள்ளிவிவரங்கள் போதுமானதாக இல்லை என்பதுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. நாம் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் 20% வன்னியர் சமூகம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கிறது என்ற தரவுகள் திரட்டப்படவேண்டும். இதற்கான போதுமான நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது," என்றார்.

சுமுகமான அணுகுமுறை நீடிக்காது

இந்த மென்மையான அணுகுமுறை நீண்டகாலம் நீடிக்காது என்று சிகாமணி கூறுகிறார். " அது ஒரு குறுகிய காலகட்டமாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி மென்மையான அணுகுமுறையை நீண்ட காலம் பின்பற்றினால், அவர்களின் ஆதரவாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதனால், இது இடைக்கால நிலைப்பாடாகவே இருக்க முடியும். அதன் பிறகு, மோதல் போக்கைத்தான் அவர்கள் கடைப்பிடிப்பார்கள்."

ஒருவேளை பாமக மோதல் அணுகுமுறையை கையில் எடுத்தால், அது போராட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார். "இந்த சட்டத்தை பாமகவின் சாதனையாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால், ஆர்ப்பாட்டங்கள் போன்ற வழியை அவர்கள் பின்பற்றலாம். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

இந்த விவகாரத்தை திமுக அரசு எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சிகாமணி, " சட்ட சிக்கலை தாண்டி, திமுக அரசு வன்னியர்களை கைவிட்டு விடமுடியாது. ஏனென்றால், வட மாவட்டங்களில் அவர்களின் ஆதரவு திமுக-வுக்கு அதிகம். அதேபோல், மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பகைத்துக்கொள்ள முடியாது. இந்நிலையில், அவர்கள் ஒரு நடுநிலைத்தன்மையை பின்பற்ற முயற்சி செய்வார்கள். ஒரு பக்கம் மட்டும் ஆதரவு அளிக்கும் முடிவை அவ்வளவு விரைவாக எடுக்க மாட்டார்கள். அதனால்தான், இதற்கான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது," என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்