யுக்ரேன் பதற்றம்: ரஷ்யப் படைகள் யுக்ரேனுக்குள் நுழைய புதின் உத்தரவு - அடுத்தடுத்த திருப்பங்கள்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:13 IST)
யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்று கூறினார்.

நேட்டோ அமைப்பில் யுக்ரேன் சேருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலையை நேட்டோ அமைப்பு புறக்கணிப்பதாக புதின் தனது உரையில் மீண்டும் குறிப்பிட்டார்.

யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புடின் அறிவித்தார்.

தொலைக்காட்சி உரை முடிந்த சிறிது நேரத்தில் இரு பிராந்தியங்களையும் அங்கீகரிப்பது தொடர்பான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் ரஷ்யப் படைகள் அப் பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன பொருள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இது யுக்ரேனின் எல்லைக்கும் படைகளை அனுப்புவதற்கான அறிவிப்பு என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனினும் தங்களது எல்லையில் எந்த மாற்றமும் இல்லை என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

பதற்றம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து யுக்ரேனுக்குச் செல்லும் விமானங்களை பல்வேறு நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

யுக்ரேன் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை இன்று கூடுகிறது. எனினும் வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் ரஷ்யாவிடம் இருப்பதால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படுவது சந்தேகம் எனக் கருதப்படுகிறது.

பிரச்சனை என்ன?

1990கள் வரை யுக்ரேன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.

இப்போதும் யுக்ரேன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக யுக்ரேனில் வாழ்ந்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள க்ரைமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு யுக்ரேனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ - யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.

பிரிவினைவாதப் போராளிகளுக்கும் யுக்ரேன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

2015ஆம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தான் மின்ஸ்க் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்