சதாமிடமிருந்து தப்பித்த இராக்கின் ஒலிம்பிக் வீரர் அமெரிக்காவில் குடியேறிய கதை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (08:40 IST)
"அதிபர் கிளிண்டனை பார்க்காதீர்கள்" 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு முன்னர் ராயித் அகமது இவ்வாறு அறிவுறுத்தப்பட்டார்.
 
கிளிண்டனும் அமெரிக்காவும் இராக்கை அழிக்க விரும்புவதால் அவருக்கு மரியாதை காட்டப்படக்கூடாது என்று இராக்கிய பளுதூக்கும் வீரரிடம் கூறப்பட்டது. சதாம் ஹூசேனின் மூத்த மகன் உதய்யின் உத்தரவின் பேரில் இராக் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகளிடமிருந்து இந்த செய்தி வந்தது.
 
" இடது அல்லது வலது பக்கம் பார்க்க வேண்டாம், ஏனெனில் அமெரிக்க அதிபர் அங்கு இருப்பார் என என்னிடம் கூறப்பட்டது," என ராயித் கூறுகிறார்.
 
"எந்த பிரச்சனையும் இல்லை என நான் கூறினேன்."
 
பெருமையுடன் தேசியக் கொடியைப் தாங்கியவாறு 29 வயதான ராயித் அரங்கத்திற்குள் நுழைந்தார்.
 
இராக் அதிகாரிகளின் பார்வை அவர் மீது இருந்தபோதிலும், ராயித் தனது வலதுபுறம் பார்த்தார்.
"என்னால் நம்பவே முடியவில்லை. கிளிண்டன் எங்களைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் எழுந்து நின்று கைதட்டினார்," எ ன ராயித் குறிப்பிட்டார்.
 
ராயித்தின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட தருணம் அது.
 
1967 இல் இராக் நகரமான பாஸ்ராவில் ஷியா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ராயித்தின் தந்தை பாடி பில்டிங் எனப்படும் உடல்வளர்ப்பு பயிற்சியாளராக இருந்தார். 1980களின் முற்பகுதியில் ராயித் பளுதூக்குதலில் சாதிக்கத்தொடங்கினார். 1984 ஆம் ஆண்டில் அவர் 99 கிலோகிராம் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 
குவைத் மீது படையெடுத்த இராக் படைகள் அமெரிக்கத் தலைமையிலான பன்னாட்டு கூட்டணியால் விரட்டப்பட்ட முதல் வளைகுடாப் போருக்குப் பின்னர் 1991 இல், இராக்கின் தெற்கில் ஷியா அரேபியர்களும் வடக்கில் குர்துகளும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
 
"இராக் ராணுவமும், மக்களும், விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரி சதாம் ஹுசைனை பதவிவிலகும்படி கட்டாயப்படுத்த வேண்டும்," என அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒரு உரையில் கூறினார்.
 
சதாமுக்கு எதிரான எழுச்சிகளை அமெரிக்கா ஆதரிக்கும் என்பதே இதற்கு அர்த்தம் என ஷியாக்களும், குர்துகளும் நம்பினர்.பாஸ்ரா மற்றும் பிற நகரங்களில், நூற்றுக்கணக்கான ஆயுதமேந்தாத பொதுமக்கள் தெருக்களில் இறங்கி அரசு கட்டடங்களின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொண்டனர்.
 
கைதிகளை விடுவித்தனர் மற்றும் சிறியரக ஆயுதங்களைக் கைப்பற்றினர். நாட்டின் 18 மாகாணங்களில் 14 இன் கட்டுப்பாடு சதாமிடமிருந்து பறிக்கப்பட்டது. தலைநகர் பாக்தாத்திற்கு சில மைல் தூரம் வரை இந்த சண்டை எட்டியது.
 
இந்த எழுச்சி நாடு முழுவதும் பரவிய நிலையில், இராக்கின் உள் விவகாரங்களில் தலையிடுவதோ, சதாமை அதிகாரத்திலிருந்து நீக்குவதோ ஒருபோதும் தங்கள் கொள்கை அல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.
 
வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஆதரவு இல்லாத நிலையில் சதாம், ஷியா மற்றும் குர்துகளுக்கு எதிரான தனது மிகக் கொடூரமான அடக்குமுறை செயல்களை கட்டவிழ்த்துவிட்டு, சில மாதங்களில் ஆயிரக்கணக்காணவர்களைக் கொன்றார்.
கெமிக்கல் அலி என்றும் அழைக்கப்படும் சதாமின் உறவினரான அலி ஹசன் அல்-மஜித், கிளர்ச்சிகளை ஒடுக்க, பாஸ்ராவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை வரிசையாக நிறுத்தி சுட்டுக் கொன்றதை தாம் பார்த்ததாக ராயித் நினைவு கூர்ந்தார்.
 
இராக் மீதான ஐ.நா. பொருளாதார தடைகளும் சாதாரண மக்களை பாதித்தன. அடிப்படையான உணவை வாங்க மக்கள் சிரமப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 
நாட்டைவிட்டு எப்படி வெளியேறுவது என்று அவர் ஏற்கனவே யோசிக்க ஆரம்பித்திருந்தார்.
 
பெரும்பாலான இராக்கியர்களைப் போல் அல்லாமல், ராயித்துக்கு போட்டிகளுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
 
ஆனால் இராக்கில் ஒரு பிரபல விளையாட்டு வீரராக இருப்பது என்பது இராக் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இராக் கால்பந்து கழகத்தின் தலைவராக இருந்த சதாமின் மிருகத்தனமான மகன் உதய் ஹுசேனுடன் நேருக்கு நேர் வருவதைக் குறிக்கிறது.
 
பெனால்டியை தவறவிடுவது, ரெட் கார்ட் போன்றவைகளுக்கு மின்சார கேபிள்கள் மூலம் சித்திரவதை செய்வது, கழிவுநீரில் குளிக்க கட்டாயப்படுத்துதல் மற்றும் மரணதண்டனை போன்றவை உதய் அளிக்கும் சில தண்டனைகள்.
 
"அவர் விரும்பியதைச் செய்வார், அவர் சதாமின் மகன்" என்று ராயித் கூறுகிறார்.
 
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில், சர்வதேச போட்டிகளுக்கு முன்னதாக உதய்யின் எதிர்பார்ப்புகளை குறைக்க ராயித் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.
 
"தங்கப் பதக்கத்தை நாட்டிற்காக வெல்லமுடியுமா என்று அவர் கேட்டபோது, ​​அது முடியாது, தங்கப் பதக்கத்திற்காக குறைந்தது நான்கு வருடங்கள் உழைக்க வேண்டும். மேலும் பாஸ்ராவில் அதைச் செய்வது மிகவும் கடினம். பளுதூக்குதலுக்கு நிறைய உணவு மற்றும் உடல்நல சிகிச்சையும் தேவை என்று நான் கூறினேன்."
 
இராக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேற சர்வதேச போட்டிகளே சிறந்த வழி என்று ராயித் கருதினார். அவர் முன்னெப்போதையும் விட கடினமாக பயிற்சி செய்தார்.
 
1995 ஆம் ஆண்டில், அவர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பிற்காக சீனாவுக்குச் சென்றார், ஆனால் சீன அதிகாரிகள் அவரை திருப்பி ஒப்படைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக அவர் உணர்ந்தார். எனவே தப்பிச்செல்லும் முயற்சியை கைவிட்டார். ஒலிம்பிக் அணியில் இடம் பெற போதுமானதாக அவரது செயல்திறன் இருந்தது. ஆகவே அவர் அட்லாண்டா செல்வது உறுதியானது.
 
ஒலிம்பிக்கிற்கு பயணிப்பதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பரை ராயித் தொடர்பு கொண்டார். தன்னை இராக்கிற்கு திருப்பி அனுப்பினால் என்ன செய்வது? தன் குடும்பத்திற்கு என்ன நடக்கும்? இராக் அதிகாரிகளின் கழுகுப் பார்வையிலிருந்து எப்படித் தப்புவது? இதுபோன்ற கேள்விகள் அவரைத் துளைத்தன. அமெரிக்கா செல்ல விமானத்தில் ஏறிய போதுகூட தனது திட்டம் நடக்குமா என்று ராயித்துக்கு தெரியவில்லை.
 
ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்ததும் ராயித் எந்த சந்தேகமும் வராமல் நடந்துகொண்டார். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவில் தனது தேசியக் கொடியைச் சுமக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது.
 
தொடக்க விழாவுக்கு முன்னர், சதாமின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் அன்மர் மஹ்மூத், அதிபர் கிளிண்டனைப் பார்க்க வேண்டாம் என்று பலமுறை அவரிடம் கூறினார்.
 
1996 ஜூலை 19 ஆம் தேதி ராயித் ஒலிம்பிக் தடத்தை சுற்றி வந்தபோது மஹ்மூத் அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார்.
 
தான் கிளின்டனைப் பார்ப்பதை மஹ்மூத் கவனித்ததாகவும், ஆனால் அவர் எதுவும் கூற வில்லை என்றும் ராயித் கூறுகிறார். அமெரிக்க அதிபர் கைதட்டியதைப் பார்த்து இராக்கிய அதிகாரிகள் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டனர் என்றார் அவர்.
 
அவரது மனதில் இருந்த எள்ளளவு சந்தேகமும் இப்போது நீங்கிவிட்டது . தான் மீண்டும் இராக்கிற்கு செல்லப் போவதில்லை என்று அவர் முடிவுசெய்தார். ஆனால் அமெரிக்காவில் எப்படி தங்குவது என்ற பிரச்சனை இப்போது உருவெடுத்தது.
 
ராயித், அமெரிக்காவில் உள்ள நண்பரான மொஹ்சென் ஃப்ராடியை தொடர்பு கொண்டு தனது திட்டத்தை அவரிடம் கூறினார். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரி, இன்திஃபாத் க்வாம்பர் என்பவர் ஒலிம்பிக் கிராமத்திற்கு அவரை சந்திக்க வந்தார். தன்னை வெளியேற்ற ராயித் அவரிடம் உதவி கேட்டார்.
 
"இராக் ஒலிம்பிக் அதிகாரிகள் நான் அமெரிக்காவில் தங்க விரும்புவதாக சந்தேகிக்கத் தொடங்கினர். நான் அவ்வாறு செய்தால் சிறையில் அடைக்கப்படுவேன் என்றும் மிரட்டினார்கள்," என்று ராயித் குறிப்பிட்டார்.
 
ராயித் மனம் தளரவில்லை. திட்டம் இறுதிசெய்யப்பட்டது. ஆனால் முதலில் போட்டியிட வேண்டியிருந்தது. போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது எடைப்பிரிவில், கடைசி மூன்றாவது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார். போட்டி முடிந்தது. இப்போது அவர் தப்பிப்பதற்கான நேரம்.
 
1996 ஜூலை 28 அன்று, இராக் ஒலிம்பிக் குழு அருகிலுள்ள மிருகக் காட்சிசாலைக்கு செல்ல தயாரானது. குழு காலை உணவு சாப்பிட கீழே சென்றபோது​​ ராயித் தனது அறையில் எதையோ மறந்துவிட்டதாக நடித்தார்.
 
தனது பைகளை எடுத்துக்கொண்டு ஒலிம்பிக் கிராமத்தின் முன்புறம் அவர் விரைந்தார். க்வாம்பர் மற்றும் ஃப்ராடி ஒரு காரில் அவருக்காக காத்திருந்தனர். ராயித் ஏறியதும், கார் அங்கிருந்து பறந்தது.
 
"என் குடும்பத்தினரைப் பற்றியே என் கவலை இருந்தது. நான் தப்பித்துவிட்டேன் என்று இராக் அதிகாரிகள் கண்டுபிடித்த பிறகு அவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயந்தேன்," என அவர் நினைவு கூர்ந்தார்.
 
இராக் அதிகாரிகள் ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருந்ததால் பாஸ்போர்ட் இல்லாமல் வெளியேறிய ராயித், ஒரு இராக்கி - அமெரிக்க வழக்கறிஞரைச் சந்தித்தார். அமெரிக்காவில் தங்கும் ராயித்தின் விருப்பத்தை விளக்க ஒரு குடியேற்ற முகமைக்கு அவர்கள் சென்றனர்.
 
பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ராயித் உலக ஊடகங்களை எதிர்கொண்டார்.
 
"நான் எனது நாட்டை நேசிக்கிறேன், ஆனால் ஆட்சியை விரும்பவில்லை" என்று நியூயார்க் டைம்ஸ், ராயித்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
 
செய்தியாளர் கூட்டத்திற்குப்பிறகு, உதய் ஹுசேனின் அலுவலகம் சி.என்.என் நிறுவனத்தை தொடர்புகொண்டது. ராயித், இராக் திரும்ப வேண்டும், ஏனென்றால் அவரது குடும்பம் முழுவதும் அங்கு பிடித்துவைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. .
 
ராயித் இராக்கிற்குத் திரும்ப மறுத்ததைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களிடம் பேச முடியவில்லை.
 
"என் குடும்பம் பல சிரமங்களை எதிர்கொண்டது. யாருமே அவர்களுடன் பேச விரும்பவில்லை. என் அம்மா ஒரு பள்ளியில் இயக்குநராக இருந்தார். அந்தப் பணியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்," என ராயித் கூறுகிறார்.
 
தனக்கு புகலிடம் வழங்கப்பட்டவுடன், மனைவிக்கு போலி இராக் பாஸ்போர்ட்டுக்கு பணம் கொடுக்க வாரத்தில் ஏழு நாட்களும் தான் வேலை செய்ததாக அவர் கூறுகிறார். 1998 ஆம் ஆண்டில் ஜோர்டானுக்குச் சென்ற அவரது மனைவி, ஐ.நா. அதிகாரிகளின் உதவியுடன் அமெரிக்காவை அடைந்தார்.
 
ராயித்தும் அவரது மனைவியும் மிஷிகனில் உள்ள டியர்போர்னில் குடியேறினர். இன்றுவரை அங்கு வாழ்ந்து வரும் அவர்கள் ஐந்து குழந்தைகளை வளர்த்துள்ளனர். அந்தப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் அரபு சமூகத்தினர் வாழ்கின்றனர். 2003 ல் இராக் போர் தொடங்கியதிலிருந்து, ஆயிரக்கணக்கான இராக்கிய அகதிகள் இப்பகுதியில் குடியேறினர்.
 
பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையை செய்த அவர் பளுதூக்குபவராக தொடர்ந்து பயிற்சி பெற்றார். உள்ளூர் இராக் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளுக்கும் அவர் பயிற்சியளித்தார்.
 
2004 இல், சதாம் ஹூசேனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் முதல் முறையாக இராக் சென்றார்.
 
"என் குடும்பத்தினர் அனைவரும் எனக்காகக் காத்திருந்தார்கள். 1996 முதல் நான் அவர்களைப் பார்க்கவில்லை. என்னைப் பார்த்ததும் கண்ணீர் வடித்தார்கள். என்னை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இருக்கவில்லை," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
 
ராயித்தின் பெற்றோர் இப்போதும் பாஸ்ராவில் வசிக்கிறார்கள். கொரோனா தொற்றுநோய் தாக்குவதற்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அமெரிக்கா செல்வார்கள்.
 
இந்த ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவை எப்போதும்போல தான் தொலைக்காட்சியில் பார்க்கப்போவதாக ராயித் தெரிவித்தார்.
 
"இதைப் பார்ப்பது என்னை 25 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லும். எனது அனுபவத்தை நான் மீண்டும் அசைபோடுவேன்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்