சவுதி சியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Webdunia
சனி, 2 ஜனவரி 2016 (17:15 IST)
பிரபல சியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
 

 
பயங்கரவாத குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் இவரும் அடங்குவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
 
சவுதி முடியாட்சியை விமர்சித்ததை அடுத்து 2012இல் அவர் கைது செய்யப்பட்டார்.
 
ஆனால், அவர் எந்தவிதமான வன்செயல்களிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அவரது கைதை அடுத்து அந்த நாட்டின் சியா சிறுபான்மையினர் மத்தியில் போராட்டங்கள் வெடித்தன.
 
அவரது மரண தண்டனை குறித்த செய்திக்கு, அந்த பிராந்தியத்தின் சியா பெரும்பான்மை நாடான இரானிடம் இருந்து கோபத்துடனான கண்டனம் வந்திருக்கிறது.
 
இதனை ஒரு ''குற்றம்'' என்று வர்ணித்துள்ள இரானின் முக்கிய மதகுருவான அயதொல்லா அஹ்மட் கட்டாமி, இதனால் சவுதி அரச குடும்பம் அழியும் நிலை உருவாகும் என்று கூறியுள்ளார்.