ரஜினியின் புதிய திட்டம்: அமெரிக்காவில் காத்திருக்கும் தனுஷ் - பின்னணி தகவல்கள்

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (13:26 IST)
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ` கொரோனா பரவல் காரணமாக சில பரிசோதனைகளை ரஜினியால் மேற்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

ரத்த அழுத்தத்தில் மாறுதல்

அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2016ஆம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதன்பின்னர், படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். தற்போது `சன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் `அண்ணாத்த' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாதில் படப்பிடிப்பில் இருக்கும்போது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மருத்துவ பரிசோதனையில் `கோவிட் நெகட்டிவ்' என வந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அச்சப்படும்படியாக எதுவும் இல்லாததால் சென்னை திரும்பினார். இதன் தொடர்ச்சியாக, தனது அரசியல் வருகைக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட ரஜினி, ` மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி `அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது எனத் தெரிய வந்தது. எனக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாக பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க நேரிட்டது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

தடைபட்ட அமெரிக்க பயணம்

இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

``தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் வேகம் சற்று தணிந்து வருகிறது. அதேநேரம், தனது உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா செல்வது தொடர்பான திட்டமிடுதலில் இருந்தார். ஆனால், அவ்வாறு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வருவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தற்போது அவரது பயணத் திட்டம் உறுதியாகி விட்டது" என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் சிலர்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில தகவல்களை அவர்கள் விவரித்தனர். ``சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் சில பரிசோதனைகளை ரஜினி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டே உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. காரணம், கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஊரடங்கை பிறப்பித்துவிட்டனர். இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றுவந்தார். அங்கு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகே சென்னை வருவது அவரது வழக்கமாக இருந்தது.

நினைவூட்டிய மருத்துவர்கள்

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடம் காணொளி காட்சி மூலமாக தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்று வந்தார் ரஜினி. சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் ரஜினியின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

அமெரிக்காவில் இருந்தும் சில மருந்துகள் வர வேண்டியிருந்ததால், அதனையும் தருவித்தனர். தவிர, ரஜினியின் உடல்நிலையை பொருத்தவரையில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். இது தொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அமெரிக்க மருத்துவமனை அனுப்பியுள்ளது. கொரோனா காரணமாக அவரது அமெரிக்கப் பயணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டேயிருந்தது. இந்தமுறை முன்கூட்டியே சென்று வருவது என அவர் முடிவெடுத்தார். அவர் மட்டும் தனியாகச் செல்வதாகத்தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரணம், `தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்துக்காக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் உள்ளனர். ரஜினி அங்கே செல்லும்போது அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையை ஐஸ்வர்யா உடனிருந்து பார்த்துக் கொள்ள இருக்கிறார். அமெரிக்காவில் தனுஷின் படப்பிடிப்பு கடந்த 15 ஆம் தேதியே முடிவடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அங்கே அவர்களும் ரஜினியின் வருகைக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 21 ஆம் தேதி ரஜினி அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது" என்கின்றனர்.

ரஜினியின் பயணத் திட்டம் என்ன?

ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து, அவரது மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கொரோனா காரணமாக பெரிதாக எந்தப் போக்குவரத்துகளும் இல்லாததால்தான் அவரது பயணம் தடைபட்டது. தற்போது அவர் அமெரிக்கா செல்வது உண்மைதான். ஆனால், எப்போது செல்வார் என்கின்ற தேதி மட்டும் இன்னும் முடிவாகவில்லை. ஒவ்வொரு வருடமும் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்கச் சொல்வது வழக்கம். இதையடுத்து, சில பரிசோதனைகளை இங்கேயே முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு அதனை அனுப்புவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக, `இங்கேயே சிகிச்சையை தொடரலாமா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டுமா?' என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வர். அவர் தனியாக விமானத்தில் பயணிக்கப் போகிறாரா அல்லது குடும்பத்துடன் செல்வாரா எனவும் தெரியவில்லை. அமெரிக்காவில் ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடித்து வருகிறார். அவர் 3 மாதங்களாக அங்கேதான் இருக்கிறார். இதுதொடர்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை" என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்