'ஃபீலே ஆய்வுக்கலம் மீளவும் இயங்கும்': விஞ்ஞானிகள் நம்பிக்கை

Webdunia
சனி, 15 நவம்பர் 2014 (17:47 IST)
ஐரோப்பிய விண்வெளி நிலையத்திலிருந்து வால் நட்சத்திரம் ஒன்றுக்கு அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் மீளவும் நகர்த்தி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மின்கலன்களுக்கு மீளவும் சக்தியூட்டிக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
குறித்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றபடியால், சோலார் கருவிகள் கூடுதல் சூரிய ஒளியைப் பெறக்கூடிய விதத்தில் ஃபீலே ஆய்வுக்கலம் சற்று நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
 
வால்நட்சத்திரத்தின் தரையிலிருந்து பெறப்பட்ட மேலும் ஒருதொகுதி மாதிரித் தகவல்களை பூமிக்கு அனுப்பிவைத்த பின்னர் ஃபிலே கலம் உறக்கநிலைக்கு சென்றுள்ளது.
 
இந்த வாரத்தின் முற்பகுதியில் தரையிறங்கியபோது ஃபீலே ஆய்வுக்கலம் பாறையொன்றின் நிழல் படக்கூடிய இடத்தில் நிலைகொண்டுவிட்டது. இதனால் அதன் மின்கலன்களுக்கு மீளசக்தியூட்ட முடியாதநிலை ஏற்பட்டது.