மடகாஸ்கரில் 40 பேர் பிளேக் நோய்க்குப் பலி

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2014 (14:26 IST)
மடகாஸ்கரில் பிளேக் நோய்த் தொற்றினால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 80 பேருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
 
இதனால் தலைநகர் அந்தனானரிவோவில் பிளேக் நோய் வேகமாக பரவும் அபாயம் அதிகரித் துள்ளதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
முக்கிய பூச்சி மருந்தொன்றுக்கு எதிராக பூச்சிபுழுக்கள் தங்களின் எதிர்ப்பு சக்தியை அதிகளவில் வளர்த்துக் கொண்டுள்ளமையே இந்த நோய் பரவல் மோசமடையக் காரணம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
 
கிருமித் தொற்றுள்ள ஒட்டுண்ணிகள், எலிபோன்ற கொறித்துண்ணும் சிறிய உயிரினங்களின் உடலில் ஒட்டியிருந்துகொண்டு, பின்னர் மனிதர்களைக் கடிக்கும்போது தான் புபோனிக்(bubonic) பிளேக் என்ற நோய் மனிதர்களிடத்தில் தொற்றுகின்றது.
 
முன்கூட்டியே கண்டறியப்பட்டால், ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் இந்த நோயைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால், மடகாஸ்கரில் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களில் 2 வீதமானவர்கள் மிகவும் அபாயகரமான- நுரையீரலைத் தாக்கக்கூடிய நியோமொனிக் (pneumonic) பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நியோமொனிக் பிளேக் நோய் இருமல் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது. உலகின் நான்காவது பெரிய தீவு நாடான மடகாஸ்கரின் தலைநகரில் அதிகரித்த சனநெருக்கடி மற்றும் பலவீனமான சுகாதார முறைமை காரணமாகவே இந்த நோய் வேகமாக பரவும் அபாயம் மோசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
 
தலைநகரில் இரண்டு நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். கடந்த ஆகஸ்டில், தலைநகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமாஹட்டமான என்ற கிராமத்தில் தான் முதலாவது பிளேக் நோயாளி அடையாளம் காணப்பட்டிருந்தார்.
 
இந்த மூன்று மாதங்களில் தான், நாட்டின் வேறு பகுதிகளில் பிளேக் நோய்த் தொற்றுக்கு உள்ளான 120 பேரில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த நோய் பரவலைத் தடுப்பதற்காக செயலணி ஒன்று இப்போது களத்தில் இறங்கியுள்ளது. இந்த நோய் பரவும் வேகத்தைக் குறைக்காவிட்டால், மடகாஸ்கர் தீவில் கொள்ளைநோயாக பிளேக் பரவிவிடும் அபாயம் இருப்பதாக கடந்த ஆண்டு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
 
குறிப்பாக, எலிகள் நிறைந்த சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் நிலைமைதான் மிகவும் மோசம் என்றும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.