இந்திய ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: நேபாளம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (23:52 IST)
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சீன தூதர் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்ததை தொடர்ந்து அம்மாதிரியான "புனையப்பட்ட, கற்பனையான" செய்திகளுக்கு எதிராக "அரசியல் மற்றும் சட்டரீதியான" நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்திற்கான சீன தூதர் யாங் ச்சி, காத்மாண்டுவில் உள்ள சிபிஎன் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்தன. நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் யூபா ராஜ் காத்திவாடா, இந்திய ஊடகங்களில் வரும் அம்மாதிரியான செய்திகள் வலுவான "அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வித்திடும்" என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியா காத்திவாடா, "ஊடகங்கள் மீது தடை விதிக்க அரசு விரும்பவில்லை. ஆனால் ஊடகங்கள் ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறேன்," என தெரிவித்தார்.

சில இந்திய ஊடகங்கள் நேபாளம் குறித்து எதிர்மறையான செய்தி வெளியிடுவது குறித்து குறிப்பிட்ட அவர், "நேபாள மக்களின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பெருமையை வெளிநாட்டு ஊடகங்கள் கெடுப்பதை இந்த அரசு விரும்பவில்லை" என தெரிவித்தார்.

எந்த ஒரு ஊடகத்தின் பெயரையும் வெளியிடாமல், இந்த மாதிரியான செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் வலுவான அரசியல் மற்றும் ராஜீய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.

இம்மாதிரியான சூழலில், அரசு அரசியல் மற்றும் சட்டரீதியான தீர்வுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீன தூதர் யாங்க் ச்சி காத்மாண்டுவில் மற்றொரு முக்கிய ராஜீய சந்திப்பில் கலந்து கொண்ட நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. வியாழனன்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத் தலைவர் ப்ரசந்தாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த வார தொடக்கத்தில், ஆளும் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டத்தில் மற்றொரு சிபிஎன் தலைவர்களான நேபாள பிரதமர், முன்னாள் பிரதமர் ஜலானாத் கானல் மற்றும் மாதவ் குமார் நேபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேபாள ராஜீய விஷயத்தில் சீனா தலையிடுவது நேபாளத்தின் ஆளும் கட்சியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பெரும்பாலான நிலைக்குழு உறுப்பினர்கள், நேபாள பிரதமர் கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்தும், லிபுலேக் விவகாரத்தில் இந்தியாவுடனான உறவு குறித்தும் அதிருப்தி தெரிவித்து அவர் பதவி விலக வேண்டும் என கோரியுள்ளனர்.

இதை தொடர்ந்து பிரதமர் மற்றும் ப்ரசாந்தாவுக்கு இடையே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அதனால் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

நேபாள சிபிஎன்-யுஎம்எல் மற்றும் சிபிஎன் மாவோயிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சீன தலைவர்கள் நீண்ட காலமாக அறிவுறுத்தி வந்தனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலுக்கு சற்று முன்பு இந்தக் கட்சிகள் இணையவும் செய்தன. இதனால், நாடாளுமன்றத்தின் மிகவும் சக்திவாய்ந்த கட்சியாக இது உருவெடுத்தது.

ஆனால், சீன தூதர் ஹூ யங்சியின் சமீபத்திய ராஜதந்திர நடவடிக்கை, இந்தியாவை சந்தேகப்பட வைத்தது. இந்தியாவின் சில ஊடகங்கள் சிபிஎன் தலைவர்களுடன் ஹூ நடத்திய சந்திப்பு கூட்டங்களை கிண்டல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டன. சமூக ஊடகங்களிலும் இதனை காண முடிந்தது.

இதுபோன்ற நடவடிக்கைகள், இந்திய - நேபாள உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என நேபாள அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் கவலை தெரிவித்தனர்.

நேபாள அரசும் அதற்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, நேபாள பத்திரிக்கையாளர் சங்கத்தின், ஒரு அமைப்பான நேபாள் பத்ரகார் மகாசங்கமும், நேபாளம் குறித்த செய்தியை இந்திய ஊடகங்கள் எதிர்மறை நோக்கத்தொடு வெளியிடுவதாகக்கூறி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

நேபாளம் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் தவறாக இருக்கின்றன என்றும் அதை நிறுத்தி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்