இலங்கையை இந்தியா 2500 ஆண்டுகளாக நாசமாக்கியுள்ளது - முன்னாள் கணக்காய்வாளர்

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:17 IST)
(இன்றைய (மே 26) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படலாமென முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"நாட்டில் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது. சுனாமியின் இரண்டாவது அலை வருமென நான் இதற்கு முன்னர் எச்சரித்திருந்தேன். தற்போது இரண்டாவது அலை ஆரம்பித்துவிட்டது. இதனை செப்டம்பர் மாதத்தில் நன்கு உணர முடியும்.

நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். இலங்கையை அமெரிக்கா, சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற்ற முடியாது. 2500 ஆண்டுகளாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது. இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்தியா வழங்கும் கடன்களை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் நாட்டிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும்" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பாஸ்போர்ட்டை அளிக்காத மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும் இதுவரை அதனை அவர் செய்யவில்லை என, நேற்று கோட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது என, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "சட்ட மா அதிபர் சார்பில் இந்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன இதனை கோட்டை நீதிபதி திலின கமகேவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்த, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்பலால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்னாண்டோ ஆகியோரின் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன, "கடந்த 12 ஆம் தேதி 24 பேருக்கு சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்தது. அவர்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. எனினும், இதுவரை மஹிந்த ராஜபக்ஷ, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்பலால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்னாண்டோ, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் இதுவரை தங்கள் பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் அளிக்கவில்லை" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், "எரிபொருள் விலை உயர்வு, கோழித் தீவனத்தின் விலை உயர்வு காரணமாக ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. கோழித்தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.

65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழித் தீவன உணவுப் பொதியின் விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது இது மேலும் அதிகரிக்கும்.

பண்ணையாளர்கள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்" என, அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்