பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 1 லட்சம் வாத்துகளை அனுப்பும் சீனா

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:08 IST)
லோகஸ்ட் வகை வெட்டுக் கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக 1 லட்சம் வாத்துகளை அனுப்ப இருக்கிறது அண்டை நாடான சீனா.

ஒரு வாத்து ஒரு நாளைக்கு 200 வெட்டுக்கிளிகளை உண்ணும் என்றும், வெட்டுக் கிளிகளை அழிப்பதற்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தைக் காட்டிலும் இது பயனுள்ள முறை என்றும் சீன வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லோகஸ்ட் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு மோசமானதாக இருப்பதாகக் கூறி, இதனை அவசர நிலை என்று இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது பாகிஸ்தான்.

கோடிக் கணக்கான வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் படையெடுத்து வந்து கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்தப் பிரச்சனையை குறிப்பான முறையில் எதிர்கொண்டு சமாளிப்பதற்கான திட்டங்களை உருவாக்க வல்லுநர் குழு ஒன்றை பாகிஸ்தான் அனுப்புவதாக இந்த வாரம் அறிவித்தது சீனா.

ஷெஜியாங் வேளாண் அறிவியல் அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லு லிஷி, வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான உயிரி ஆயுதங்கள்தான் இந்த வாத்துகள் என்று குறிப்பிட்டார்.

கோழிகள் ஒரு நாளைக்கு 70 வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றால் வாத்துகள் அது போல மூன்று மடங்கு வெட்டுக்கிளிகளை ஒரு நாளைக்கு சாப்பிடும் என்று அவர் தெரிவித்தார்.

வாத்துகள் கும்பலாக இருக்கும் என்பதால் கோழிகளைவிட இவற்றை சமாளிப்பதும் எளிது என்று சீன ஊடகம் ஒன்றிடம் அவர் கூறியிருக்கிறார்.

சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வரும் மாதங்களில் வாத்துகளை வைத்து ஓர் ஆராய்ச்சி நடக்கும் என்று லு கூறியதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கூறுகிறது.

அதன் பிறகு அந்த வாத்துகள் வெட்டுக் கிளிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சிந்து, பலூசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

2000ம் ஆண்டு லோகஸ்ட் வெட்டுக் கிளிகளை சமாளிப்பதற்காக ஷிஜியாங் மாகாணத்தில் இருந்து ஜின்ஜியாங் மாகாணத்துக்கு 30 ஆயிரம் வாத்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

2018-19 புயல் காலத்தில் ஆரேபிய தீபகற்பத்தில் பெய்த கடும் மழை பெய்தபோது, மூன்று முறை இந்த வெட்டுக் கிளிகள் வரலாறு காணாத அளவில் இனப்பெருக்கம் செய்தன.

தற்போதைய மோசமான வெட்டுக்கிளி படையெடுப்புக்கான மூலதாரம் அந்த இனப்பெருக்கத்தில்தான் இருக்கிறது என்றும் அது கண்டுபிடிக்கப்படாமல் போனது என்றும் ஐ.நா. கூறுகிறது. அதில் இருந்தே கூட்டம் கூட்டமாக வெட்டுக் கிளிகள் தெற்காசியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் படையெடுத்தன.

கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன லோகஸ்ட் வெட்டுக் கிளிகளை சமாளிக்க சர்வதேச உதவி தேவை என்று ஜனவரியில் ஐ.நா. கோரிக்கை விடுத்தது.

உணவுப் பயிர்களை விழுங்கும் இந்த வெட்டுக் கிளிகள் ஏற்படுத்தும் வரலாறு காணாத பேரழிவை சமாளிக்க முடியாமல் எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய நாடுகள் போராடிவருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்