பல கோடி டாலர்கள் மதிப்புள்ள உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களைப் பெற இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கைதான இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது அந்நாட்டு காவல்துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பல நாடுகளின் புலனாய்வாளர்கள் உதவினர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கின் விசாரணையில் கடைசியாக இருவரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
பிடிபட்டவர்களுக்கு தற்போது முறையே 67 மற்றும் 71 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் தெற்காசிய நாடுகளில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்எம்இசி இன்டர்நேஷனல் (எஸ்எம்இசி) நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்.
இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்படும்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இருவரும் 2009 மற்றும் 2016 ஆண்டுக்கு இடையில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் A$ 304,000 ($190,000, £172,000) லஞ்சம் கொடுத்ததாக ஆஸ்திரேலிய காவல்துறையான ஏஎஃப்பி கூறுகிறது.
இலங்கையில் செயல்படுத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு திட்டங்களைப் பெறுவதற்காக இவர்கள் லஞ்சம் கொடுத்ததாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவை என்ன திட்டங்கள் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட அரசாங்கங்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய காவல்துறை நடத்திய புலனாய்வைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் எஸ்எம்இசி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மேலும் சில கைதுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை (ஏஎஃப்பி).
"நியாயமான போட்டியை 'ஊழல்' மட்டுப்படுத்தும். மேலும், வளரும் பொருளாதாரங்கள், உலகளாவிய வறுமை எதிர்ப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்" என்று துப்பறியும் கண்காணிப்பாளர் ஹெலன் ஷ்னைடர் கூறியுள்ளார்.
எஸ்எம்இசி நிறுவனம் ஆரம்பத்தில் ஸ்னோயி மவுன்ட்டெய்ன்ஸ் இஞ்சினியரிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிகரற்ற ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் நோக்குடன் 1949இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் பல நாடுகளில் 5,400 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் அளவிற்கு இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது.
2017ஆம் ஆண்டில், எஸ்எம்இசி மீதும் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள அதன் துணை நிறுவனங்கள் மீதும் எந்தவொரு ஒப்பந்தங்கள் மற்றும் ஏலம் எடுக்க முடியாத வகையில் உலக வங்கி தடை விதித்தது. இலங்கை மற்றும் வங்கதேசத்தில் "பொருத்தமற்ற கொடுப்பனவுகள்" நடந்ததில் எஸ்எம்இசி-ஐ தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்தது.
அந்த நேரத்தில், எஸ்எம்இசி செய்தித் தொடர்பாளர், தமது நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் எந்தவொரு ஆஸ்திரேலிய திட்டங்களுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை என்றும், பெருநிறுவன ஒருமைப்பாடு இணக்க திட்டங்களை தொடர்ந்து எஸ்எம்இசி வலுப்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வரலாற்றில் இல்லாத வகையில் நிலவிய மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இந்த ஆண்டு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில், தற்போது 10 வருடங்களுக்கு முந்தைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைதாகி உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான ஆஸ்திரேலிய காவல்துறையின் விசாரணையில் ஆஸ்திரேலிய பங்குச்சந்தை மற்றும் முதலீட்டு ஆணையம், ஆஸ்திரேலிய வணிக மற்றும் முதலீட்டு ஆணையம் ஆகியவை புலனாய்வாளர்களுக்கு உதவின.
ஆஸ்திரேலியாவின் டெளனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில், கைதான இருவரும் தங்கள் மீதான வழக்கை எதிர்கொள்வார்கள்.