மேக்ஸ் 737 ரக விமானங்கள் பறக்கத்தடை: விபத்திற்கு பின் போயிங் நிறுவனம் முடிவு

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (18:31 IST)
சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனீசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங்.
 
உலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் இந்த ரகத்தைச் சேர்ந்த 371 விமானங்கள் இதன் மூலம் நிறுத்திவைக்கப்படும். எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேரும், இந்தோனீசிய விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை.
 
எத்தியோப்பிய விபத்தைத் தொடர்ந்து ஏற்கெனவே இந்தியா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்துக்கு தடை விதித்திருந்தன. ஆனால், இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து வந்தது.
 
இந்நிலையில், எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை விசாரணையாளர்கள் கண்டுபிடித்ததையடுத்து இந்த விமானங்களை நிறுத்த அமெரிக்காவும் முடிவெடுத்தது.
 
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து தொடர்பாக செயற்கைகோள் மூலமாக சீரிய புதிய தரவுகள் கிடைத்ததையடுத்து போயிங் மேக்ஸ் ரக விமானங்களை இயக்கத் தற்காலிகமாக தடை விதிப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்